எல்லை தாண்டிய பரிவர்த்தனைக்கு பயன்படுத்தும் வகையில், டிஜிட்டல் கரன்ஸியை மேம்படுத்தும் பணியில் மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் தீவிரம் காட்டி வருவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருக்கிறார்.
வங்கிகள் மூலம் டிஜிட்டல் கரன்ஸியை சில்லறை சந்தையில் அறிமுகப்படுத்தும் சோதனைத் திட்டத்தை கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மத்திய அரசு தொடங்கியது. இதற்காக, பாரத ஸ்டேட் வங்கி, இந்திய யூனியன் வங்கி, பரோடா வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, ஹெச்.டி.எஃப்.சி. வங்கி, கோடக் மஹேந்திரா வங்கி, ஐ.டி.எஃப்.சி, வங்கி, யெஸ் வங்கி, ஹெச்.எஸ்.பி.சி. வங்கி ஆகிய 9 வங்கிகளை ரிசர்வ் வங்கி தேர்வு செய்தது.
ரூபாய் நோட்டுக்களின் அதே மதிப்பில் வெளியிடப்பட்ட டிஜிட்டல் கரன்ஸிகளை, பயனாளிகள் மேற்கண்ட வங்கிகள் வழங்கும் டிஜிட்டல் வேலட் முறையைப் பயன்படுத்தி பரிவர்த்தனை செய்ய முடியும். இத்திட்டம் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை.
இந்த நிலையில், டெல்லியிலுள்ள இந்து கல்லூரியின் 125-வது ஆண்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “எல்லை தாண்டிய பரிவர்த்தனைகளுக்கு டிஜிட்டல் கரன்ஸி கண்டிப்பாக பெரிய அளவில் உதவும் என்று நாங்கள் கருதுகிறோம்.
ஏனெனில், இது பொருளாதாரத்தில் வெளிப்படைத் தன்மை மற்றும் கண்டறியும் தன்மைய கொண்டுவரும். மேலும், குறைந்த செலவில் பணப் பரிவர்த்தனைகளை விரைவுபடுத்தவும் இது உதவும். ஆகவே, டிஜிட்டல் கரன்ஸி மேம்பாட்டில் ரிசர்வ் வங்கியுடன் இணைந்து மத்திய அரசும் பணியாற்றி வருகிறது” என்றார்.