இந்தியாவின் 75-வது குடியரசு தின விழாவை, இந்தியாவில் உள்ள ரஷ்ய தூதரக அதிகாரிகள் நடனமாடி கொண்டாடினர்.
75-வது குடியரசு தினம் நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. டெல்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தேசிய கொடியை ஏற்றி வைத்து, முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார். இந்நிகழ்ச்சியில், பாரத பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
குடியரசு தின விழாவை முன்னிட்டு, உலகின் பல்வேறு நாடுகளும் வாழ்த்து தெரிவித்தன. மேலும், இந்தியாவில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களில், குடியரசு தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்தியாவுக்கான அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட பல நாடுகளின் தூதர்கள் குடியரசு தின வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அந்தவகையில், இந்திய குடியரசு தினத்திற்கு ரஷ்ய தூதரகம் வாழ்த்து தெரிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள ரஷ்ய தூதரக அதிகாரிகள் இந்தியர்களுடன் சேர்ந்து பாலிவுட் பாடலுக்கு நடனமாடினர்.
இந்தியாவில் உள்ள ரஷ்ய தூதரகம் பகிர்ந்துள்ள காணொலியில், பாலிவுட் பாடலுக்கு இந்தியக் கொடிகளை அசைத்து மக்கள் நடனமாடுவதைக் காண முடிந்தது. ஒரு ரஷ்ய நடனக் குழுவினரும், அவர்களுடன் சேர்ந்து நடனமாடினார். இந்த விழாவில் பலர் பாரம்பரிய ஆடைகளை அணிந்திருந்தனர். விழாவில் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டனர்.