இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெறும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் 89 வது பதிப்பு ஜனவரி 5ஆம் தேதி தொடங்கியது.
ஐதராபாத் – அருணாச்சல பிரதேசம் அணிகளுக்கு இடையே முதல் நாள் போட்டி நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த அருணாச்சல பிரதேசம் அணி 172 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
இதனையடுத்து ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ராகுல் சிங் மற்றும் தன்மய் அகர்வால் களமிறங்கினர்.
இருவரும் சேர்ந்து அருணாச்சல பிரதேசத்தின் பந்துவீச்சை தெறிக்கவிட்டனர். ஒரு ஓவருக்கு 10 ரன்களுக்கு குறையாமல் ரன் எடுக்க வேண்டும் என முடிவு செய்து இருவரும் அதிரடியாக விளையாடி வந்தனர்.
கேப்டன் ராகுல் சிங் 105 பந்துகளில் 185 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆனால், தன்மய் அகர்வால் நிலைத்து நின்று தனது அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தார். அவர் அடிக்கும் பந்துகள் பௌண்டரீஸ், சிக்சர்களாக பறந்தது.
இவர் 119 பந்துகளில் இரண்டை சதம் அடித்து அசத்தினார். இதன் மூலம் முதல் தர கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக இரட்டை சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார்.
அடுத்து தன் அதிரடியை தொடர்ந்த அவர் 147 பந்துகளில் முன்று சதம் அடித்தார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 160 பந்துகளில் 323 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருக்கிறார்.
இதன் மூலம் முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் அதிவேக முன்று சதம் அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். தற்போது ஐதராபாத் அணியின் ஸ்கோர் 48 ஓவர்களில் மட்டுமே 529/1 ஆக உள்ளது. இதற்கு முக்கியமாக காரணமாக தன்மய் திகழ்கிறார்.
2017 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க வீரர் மார்கோ மாராய்ஸ் 191 பந்துகளில் முச்சதம் அடித்ததே இதற்கு முன்னர் சாதனையாக இருந்தது. அதை உடைத்தார் தன்மய் அகர்வால்.
மேலும், ஒரே நாளில் 300 ரன்கள் குவித்த முதல் இந்திய வீரர், இரண்டாவது ஆசிய வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். இப்போட்டியில் 33 பௌண்டரீஸ், 21 சிக்சர்கள் அடித்த இவர் இந்திய முதல் தர கிரிக்கெட் வரலாற்றில் ஒரே இன்னிங்ஸில் அதிக சிக்ஸர் அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
இப்போட்டியில் அருணாச்சல பிரதேச அணி 172 ரன்கள் குவித்த நிலையில், ஒரே நாளில் 701 ரன்கள் குவிக்கப்பட்டுள்ளது. முதல் தர கிரிக்கெட் வரலாற்றில் ஒரே நாளில் 700 ரன்களுக்கும் மேல் குவிக்கப்படுவது இது இரண்டாவது முறை ஆகும்.
இதற்கு முன்னதாக 1948 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியன்ஸ் – எசக்ஸ் அணிகள் இடையே நடந்த போட்டியில் ஒரே நாளில் 721 ரன்கள் குவிக்கப்பட்டது.