ஹனுமான் பட இயக்குனர் பிரசாந்த் வர்மா சமீபத்தில் அளித்த பேட்டியில், பிரபல இயக்குனர் ராஜமௌலி உடனான தனது உறவை பற்றி பேசியுள்ளார்.
இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தேஜா சஜ்ஜா நடித்துள்ள திரைப்படம் ஹனுமான். ஆந்திராவில் சங்கராந்தியை முன்னிட்டு இப்படம் ஜனவரி 12 ஆம் தேதி வெளியானது.
இந்த படம் விமர்சன ரீதியிலும், வசூல் ரீதியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தின் 2-ம் பாகம் குறித்த அறிவிப்பையும் இயக்குனர் பிரசாந்த் வர்மா சமீபத்தில் வெளியிட்டார்.
இந்த நிலையில் பிரசாந்த் வர்மா சமீபத்தில் அளித்த பேட்டியில், பிரபல இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி உடனான தனது தனது உறவை பற்றி பேசியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் ராஜமௌலியின் RRR படத்தால் ஈர்க்கப்பட்டு ஹனுமான் படத்தை இயக்கியதாக தெரிவித்துள்ளார். மேலும் ராஜமௌலி உடனான தனது உறவு குறித்து மனம் திறந்து பேசிய வர்மா, ஒரு காலத்தில் அவரை வெறுத்ததாக கூறினார்.
மேலும் “ நான் பொறியியல் கல்லூரியில் படித்த போது ராஜமௌலியுடன் பணியாற்ற முயற்சித்தேன். அவரிடம் உதவி இயக்குநராக சேர்வதற்காக அவரைத் தொடர்பு கொள்ள நான் பல முயற்சிகளை மேற்கொண்டேன். நான் அவருக்கு ட்விட்டரில் மின்னஞ்சல்கள் மற்றும் செய்திகளை அனுப்பினேன்.
அவர் மிகவும் பொறுமையாக பதிலளித்தார். அவரது டீமில் ஏற்கனவே போதிய உதவி இயக்குனர்கள் இருப்பதாக அவர் கூறினார். அப்போது எனக்கு கோபம் வரும். நான் மிகவும் திறமையாகவும் கடின உழைப்பாளியாகவும் இருந்தும் அவர் ஏன் என்னை வேலைக்கு சேர்க்கவில்லை என்று நினைத்து நான் அவரை வெறுத்தேன்” எனத் தெரிவித்தார்.
மேலும் அவர், ” ராஜமௌலியின் படங்களில் இருந்து தான் அனைத்தையும் கற்றுக்கொண்டேன். ஆனால் இது ஏகலவ்யாவின் கதையைப் போன்றது. எப்படி துரோணாச்சாரியார் ஏகல்வ்யாவை தனது சீடராக ஏற்றுக்கொள்ளாத போது, அவர் எல்லாவற்றையும் தூரத்திலிருந்து கவனித்துத் தானே கற்றுக்கொண்டார்.
அதே போல் நானும் ராஜமௌயிலின் படங்கள், அவற்றின் மேக்கிங் வீடியோக்கள் மற்றும் எல்லாவற்றையும் கற்றுக்கொண்டேன்” என்று கூறினார்.