ஞானவாபி மசூதி தொடர்பான வரைபடத்தை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று விஎச்பி வலியுறுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோவில் அமைந்திருக்கிறது. இதனை ஒட்டி ஞானவாபி மசூதி உள்ளது. இந்த மசூதி, முகலாய அரசர் ஒளரங்கசீப் காலத்தில் காசி விஸ்வநாதர் கோவிலின் ஒரு பகுதியை இடித்து விட்டு கட்டப்பட்டது என்று இந்துக்கள் கூறிவருகின்றனர்.
இது தொடர்பாக, இந்துக்கள் தரப்பில் தொடரப்பட்ட வழக்கில், மசூதிக்குள் தொல்லியல் துறை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டபோது, மசூதி வளாகத்தில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தொல்லியல் துறையின் ஆய்வும் நீண்டு கொண்டே சென்றது. நிறைவாக, தொல்லியல் துறை ஆய்வறிக்கையை டிசம்பர் 18-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, கடந்த மாதம் 18-ம் தேதி ஞானவாபி மசூதி தொடர்பான ஆய்வறிக்கையை தொல்லியல் துறை அதிகாரிகள் தாக்கல் செய்தனர். இந்நிலையில் விஷ்வ ஹிந்து பரிஷத் செயல் தலைவர் அலோக் குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மசூதி ஒரு அற்புதமான கோவிலை இடித்துவிட்டு கட்டப்பட்டது என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. கோவில் கட்டமைப்பின் ஒரு பகுதி, குறிப்பாக மேற்கு சுவர் இந்து கோவிலின் மீதமுள்ள பகுதியாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
அப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட சிவலிங்கத்திற்கு இந்துக்கள் சேவை பூஜை செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். எனவே, வழிபாட்டுத் தலங்கள் சட்டம், 1991 இன் பிரிவு 4 இன் படி இந்த அமைப்பை இந்து கோவிலாக அறிவிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மற்றொரு பொருத்தமான இடத்திற்கு மசூதிக்கு மாற்றவும் மற்றும் காசி விஸ்வநாதரின் அசல் இடத்தை இந்து சமுதாயத்திடம் ஒப்படைக்கவும் இன்டெஜாமியா கமிட்டிக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
இந்த நீதியான நடவடிக்கை பாரதத்தின் இரண்டு முக்கிய சமூகங்களுக்கிடையில் இணக்கமான உறவுகளை உருவாக்குவதற்கான ஒரு முக்கியமான படியாக இருக்கும் என விஷ்வ ஹிந்து பரிஷத் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.