பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
பீகார் மாநில முதல்வராக இருக்கும் நிதிஷ்குமாருக்கும், கூட்டணிக் கட்சியான லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சிக்கும் மோதல் போக்கு தொடங்கி இருக்கிறது. லாலுவின் மகன்கள் இருவரில் ஒரு துணை முதல்வராகவும், மற்றொருவர் அமைச்சராகவும் இருக்க, மகள் எம்.பி.யாக இருந்து வருகிறார்.
இதை சுட்டிக்காட்டும் வகையில், வாரிசு அரசியலை ஒழிக்க வேண்டும் என்று நிதிஷ்குமார் கூறினார். உடனே, லாலுவின் மகள், தனது சமூக வலைத்தள பக்கங்களில் நிதிஷ்குமாரை வறுத்தெடுத்தார். இது இரு தரப்பினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
இதன் காரணமாக, நிதிஷ்குமார் மீண்டும் பா.ஜ.க. கூட்டணிக்கு தாவ இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக ராஷ்ட்ரீய ஜனதா தளம் எம்எல்ஏக்கக்களை இன்று காலை சந்தித்து நிதிஷ்குமார் ஆலோசனை நடத்தினார். இதனைத்தொடர்ந்து பீகார் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை அவர் சந்தித்தார்.
அபோது தமது பதவி விலகல் கடிதத்தை சந்தித்து அவர் அளித்தார். அவரது பதவி விலகலை ஆளுநர் ஏற்றுக்கொண்டதாகவும், இடைக்கால முதலமைச்சராக தொடரும்படி ஆளுநர் கேட்டுக்கொண்டார். இந்நிலையில் இன்று மாலையே பாஜக ஆதரவுடன் நிதிஷ்குமார் முதலமைச்சராக பதவியேற்பார் என செய்திகள் வெளியாகியுள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும், 2020-ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து நிதிஷ்குமார் ஆட்சியை பிடித்தார். பின்னர் கூட்டணியிலி இருந்து விலகி லாலுபிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியுடன் கைகோர்த்த நிதிஷ் குமார், பீகார் மாநிலத்தின் முதலமைச்சராக தொடர்ந்து செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.