அடல் சேது பாலத்தில் வாகனங்களை ஓரமாக நிறுத்தி விட்டு புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் காட்டும் பயணிகள், ஆபத்தை உணராமல் அலட்சியம் செய்யும் வீடியோ வெளியாகி உள்ளது.
அடல் சேது பாலம் அல்லது மும்பை டிரான்ஸ் துறைமுக இணைப்புச் சாலை (MTHL) என அழைக்கப்படும் இந்த 21 கி.மீ நீளமுள்ள பாலத்தை கடந்த 12-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி, மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
மொத்தம் 6 வழிச்சாலையாக அமைந்துள்ள 21.8 கிலோமீட்டர் நீள பாலத்தின் மூலம் இரண்டு மணி நேரம் ஆக வேண்டிய பயணம் வெறும் 20 நிமிடமாக சுருங்கியுள்ளது. இது கடல் மீது சுமார் 16.5 கிமீ நீளமும், நிலத்தில் சுமார் 5.5 கிமீ நீளமும் கொண்டது. இதற்காக 17,840 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் மூலம் தெற்கு மும்பையின் வர்த்தகம் பெரிதும் வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் அடல் சேது பாலம் கடலின் மீது அமைந்துள்ளதால் இதில் மேற்கொள்ளப்படும் பயணம் வாகன ஓட்டிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் வாகனங்களை ஓரமாக நிறுத்தி விட்டு புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இது குறித்து வெளியான வீடியோவில்,
புதிதாக கட்டப்பட்ட மும்பை டிரான்ஸ் ஹார்பர் இணைப்புப் பாலத்தின் ஓரத்தில் நீண்ட வரிசையில் வாகனங்கள் நிறுத்தப்பட்டு, பயணிகள் கார்களுக்கு வெளியே நின்று காற்றை ரசிக்கிறார்கள்.
இருப்பினும் மக்கள் வருகையை கட்டுப்படுத்த முடியவில்லை. பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினால் பாலத்தின் ஓரம் சென்று ஆபத்தான வகையில் எட்டி பார்ப்பது, புகைப்படம் எடுப்பது, செல்பி எடுப்பது, எக்குத்தப்பாக சுற்றி பார்ப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதென்ன பிக்னிக் ஸ்பாட்டா? என்று மும்பை போலீசார் கேள்வி எழுப்பி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அடல் சேது பாலத்தில் வாகனங்களை நிறுத்தி விட்டு புகைப்படம் எடுக்கும் செயலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் விபரீதங்கள் ஏதும் நிகழ்ந்துவிடக் கூடாது என மும்பை போலீசார் மிகவும் கவனத்துடன் செயல்பட்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி அடல் சேது பாலத்தில் குப்பைகளை அப்படியே தூக்கி வீசும் நிகழ்வுகளை பார்க்க முடிகிறது.
இதுதொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் கொண்டு மும்பை போலீசார் விசாரித்தும், இவ்வாறு செய்யக்கூடாது என்று எச்சரித்தும், விழிப்புணர்வு ஏற்படுத்தியும் வருகின்றனர்.
அடல் சேது கடல்வழி பாலம் பார்ப்பதற்கு ரம்மியான பாலம் தான். அதற்காக முறைகேடான வகையில் வாகனங்களை நிறுத்தக் கூடாது. புகைப்படங்கள் எடுக்கக் கூடாது. குப்பைகள் போடக் கூடாது. மீறினால் வழக்குகள் பாயும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்த பாலத்தில் நிர்ணயிக்கப்பட்ட வேகம் 100 kmph ஆகும், இங்கு வாகனங்கள் திடீரென நிறுத்தப்படும்போது விபத்தை உருவாக்குகிறது. இது மோசமானது மற்றும் ஆபத்தானது. இதுபோன்ற அதிவேக மேம்பாலங்களில் வாகனங்களை நிறுத்தாமல் செல்ல வேண்டும் என்று மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர்.