அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளில், உலகப் பொருளாதாரத்தில் இந்தியா மூன்றாவது இடத்தைப் பிடிக்கும் என குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் “விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா” என்ற தலைப்பில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில், குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில், துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடியின் திட்டங்களை நடைமுறைப்படுத்தியதற்காக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியைப் குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் பாராட்டினார். தொடர்ந்து பேசிய குடியரசுத் துணைத்தலைவர், “தற்போது, உலகப் பொருளாதாரத்தில் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது. விரைவில் மூன்றாவது இடத்தைப் பிடிக்கும். நமது கலாச்சாரம் 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. யோகா போன்ற நமது நடைமுறைகளை பின்பற்றும் நாடுகளுக்கு நாம் ஒரு தலைவராக வளர்ந்து வருகிறோம்.
டிஜிட்டல் பரிவர்த்தனைகளைப் பொறுத்தவரை, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையை விட இந்தியாவின் பரிவர்த்தனை அதிகம். கடந்த பத்தாண்டுகளில், பின்தங்கியவர்களுக்கு 100 மில்லியன் எல்பிஜி இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 500 மில்லியன் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும், 110 மில்லியன் விவசாயிகள் ஆண்டுக்கு மூன்று முறை நேரடியாகப் பணம் பெறுகின்றனர். நாம் பாரபட்சம், சொந்த பந்தம், ஊழலைத் தாண்டிவிட்டோம். தற்போது அரசாங்கம் வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுகிறது.
நாம் விக்ராந்த் போன்ற போர்க்கப்பல்களை உற்பத்தி செய்கிறோம். மேலும், நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையையும் பெற்றுள்ளோம். இன்றைய இளைஞர்களும் மாணவர்களும் இந்தியாவின் எதிர்கால சிற்பிகளாக உள்ளனர். வரும் 2047-ஆம் ஆண்டுக்குள் நமது நாடு மிகச் சிறந்த நிலையில் இருக்கும் என்று கூறினார்.