சென்னை மாநகர பேருந்துகளில் பயணிகள் யு.பி.ஐ மூலம் சீட்டு பெறும் வசதியைச் சோதனை முறையில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 3,454 மாநகராகப் பேருந்துகள் இயங்கி வருகிறது. 6,026 பேருந்து நிறுத்தங்களைக் கொண்டுள்ளது. இதில் சராசரியாகத் தினமும் 25 முதல் 30 லட்சம் பயணிகள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது, பயணிகள் நடத்துநரிடம் பணம் கொடுத்துத்தான் சீட்டு வாங்கி வருகின்றனர். இதனால், காலநேரம் விரையமும், சில்லறை தட்டுப்பாடும் ஏற்படுகிறது. இதனால், நடத்துநர், போக்குவரத்து பயணிகள் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது.
இதனால், யு.பி.ஐ மூலம் தமிழக அரசுப் பேருந்துகளில் பயணச்சீட்டு பெறும் முறை அமல்படுத்தப்பட வேண்டும் எனக் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக, பயணிகளும், சமூக ஆர்வலர்களும் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அரசு கண்டுகொள்ளவே இல்லை. தற்போதுதான், இறங்கி வந்துள்ளது.
இந்த நிலையில், முதற்கட்டமாகச் சென்னை பல்லாவரம் பேருந்து பணிமனையின் கீழ் இயங்கும் பேருந்துகளின் நடத்துநர்களுக்கு யு.பி.ஐ மூலம் பணம் செலுத்தி சீட்டு வழங்கும் வகையிலான புதிய கருவி வழங்கப்பட்டுள்ளது. இந்த கருவியில், பயணிகள் ஏறுமிடத்தையும், இறங்கும் இடத்தையும் தேர்வு செய்து சீட்டு வழங்கப்படுகிறது.
பயணிகளிடம் இதற்கு கிடைக்கும் வரவேற்பை அடுத்து சென்னையில் மற்ற பேருந்துகளிலும் இந்த திட்டம் விரிவு படுத்தப்படும் என போக்குவரத்துறை தெரிவித்துள்ளது.
இந்த திட்டத்தை தமிழக அரசு எவ்வாறு செயல்படுத்துகிறது என்றும், அது எந்த வகையில், பயணிகளுக்கு வசதியாக உள்ளது என்பதையும் பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.