சிவகங்கை மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம், அங்கு மீண்டும் போட்டியிட தி.மு.க நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை எப்படியாவது பிடித்துவிட வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் முயற்சி செய்தார். அவருக்கு அவரது தந்தையின் சப்போர்ட்டும் இருந்து வந்தது. ஆனால், கார்த்தி சிதம்பரத்தைக் காங்கிரஸ் தலைமை கண்டுகொள்ளவே இல்லை. சிதம்பரத்தின் பரிந்துரையை காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை.
இதனால், இருக்கிற பதவியைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று முடிவுக்கு வந்த கார்த்தி சிதம்பரம், சிவகங்கையில் தொடர் டேரா அடித்து, கட்சியின் முக்கிய நிர்வாகிகளைத் சந்தித்து வருகிறார்.
கடந்த தேர்தலைப் போன்று இந்த முறையும், சிவகங்கை தொகுதி காங்கிரஸ் கட்சிக்கே கிடைக்கும். எனவே, நீங்கள் எல்லோரும் உடனே தேர்தல் வேலை தொடங்க வேண்டும் எனத் தனது ஆதரவாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
சிவகங்கை மக்களவைத் தொகுதியில் 1,873 வாக்குச் சாவடிகள் உள்ளது. காங்கிரஸ் சார்பில் 10 பேர் கொண்ட வாக்குச்சாவடிக்குழுக்களை அமைக்க கார்த்தி சிதம்பரம் படாதபாடுபட்டு வருகிறார்.
கட்சி நிர்வாகிகள் கொடுத்த வாக்குச்சாவடிக்குழுக்களை இடம் பெற்றோரின் செல்போன் எண்களில் தொடர்பு கொண்டு பேசி வருகின்றனர்.
அதே சமயத்தில், கார்த்தி சிதம்பரத்திற்கு எதிராகச் செயல்படும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமசாமி ஆதரவாளர்களும் தனியாக வாக்குச் சாவடிக் குழுக்களை அமைத்து, ரகசிய ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகின்றனர். தங்கள் கூறும் நபருக்கே சீட் வழங்க வேண்டும் என குரல் உயர்த்தி வருகின்றனர்.
இந்த நிலையில், சிவகங்கை தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க கூடாது என லோக்கல் திமுக நிர்வாகிகள் தீர்மானம் நிறைவேற்றி கட்சி தலைமைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
இது தொடர்பாக திமுக மூத்த நிர்வாகி ஒருவர் பேசுகையில், சிவகங்கை தொகுதியை தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கினால், திமுக நிர்வாகிகளுக்குப் போட்டியிடும் வாய்ப்பு இல்லாமல் போய்விடும், கட்சியையும் வளர்க்க முடியாது. இதனால், திமுக முக்கிய நிர்வாகிகள் போர்க்கொடி உயர்த்தி வருகின்றனர்.
எனவே, சிவகங்கை தொகுதியை இந்த முறை தி.மு.கவுக்கு ஒதுக்க வேண்டும், இல்லையெனில் கார்த்தி சிதம்பரத்தைத் தோல்வி அடையச் செய்வோம் என்றார். இதையே திமுகவினர் தலைமைக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நிர்வாகிகளின் கொந்தளிப்பை அறிந்த தி.மு.க தலைமையும், கார்த்தி சிதம்பரம் ஆதரவாளர்களும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.