ஜார்கண்ட் மாநில சட்டம் ஒழுங்கு நிலைமை திருப்திகரமாக இல்லை என அம்மாநில அளுநர் சிபி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்சா தலைவருமான ஹேமந்த் சோரன் மீது நில மோசடி தொடர்புடைய சட்டவிரோத பணப் பரிவர்த்தனைக் குற்றச்சாட்டு உள்ளது. இந்த வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஹேமந்த் சோரனிடம் விசாரணை நடத்துவதற்காக 7 முறை சம்மன் அனுப்பியும் அதனை புறக்கணித்தார்.
பின்னர் கடந்த ஜன.20ஆம் தேதி ஆஜரான ஹேமந்த், மீண்டும் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. இந்நிலையில் விசாரணை நடத்துவதற்காக டெல்லியில் உள்ள அவரின் வீட்டிற்கு அமலாக்கத்துறை அலுவலர்கள் சென்றனர். ஆனால் அவர் வீட்டில் இல்லை. இதனையடுத்து அவரை அமலாக்கத்துறையினர் தேடி வருகின்றனர்.
இதுதொடர்பாக ஜார்கண்ட் மாநில ஆளுநர் சிபி. ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, யாரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல என்பதை சொல்லிக்கொள்கிறேன்.
சட்டத்தை விட பெரியவர்கள் என்ற நிலையை உருவாக்கக் கூடாது. விசாரணைக்கு இன்று ஆஜாராகி பதில் சொல்லவில்லை என்றால் நாளை பதில் சொல்ல வேண்டும். ஜார்கண்ட் மாநில சட்டம் ஒழுங்கு நிலைமை மிகவும் திருப்திகரமாக இல்லை, இதை நான் பலமுறை வெளிப்படுத்தியுள்ளேன் என தெரிவித்தார்.