குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்ற முப்படை வீரர்கள், பாசறைக்கு திரும்பும் நிகழ்வு இன்று டெல்லி விஜய் சவுக்கில் நடந்தது. விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்ச்சியானது 1950 களின் முற்பகுதியில் தோன்றியிருக்கிறது. இந்திய ராணுவத்தின் மேஜராக இருந்த ராபர்ட்ஸ் இந்த தனித்துவமான நிகழ்ச்சியை உருவாக்கினார்.
75-வது குடியரசு தின விழா நாடு முழுவதும் கடந்த ஜனவரி 26 ஆம் தேதி உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். 21 பீரங்கி குண்டுகள் முழங்க குடியரசுத் தலைவரால் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தப்பட்டது. சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் கலந்து கொண்டார்.
அன்றைய தினம் பல்வேறு நிகழ்வுகள் கோலாகலாக நடந்தன. குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்ற முப்படை வீரர்கள், அதற்குப் பிறகு பாசறைக்குத் திரும்புவார்கள்.
குடியரசு தின விழா அணிவகுப்பு முடிந்த மூன்றாவது நாள், அதில் பங்கேற்ற முப்படை வீரர்கள் தங்கள் பாசறைக்கு திரும்பும் நிகழ்வு நடப்பது வழக்கம். சிறப்பு வாய்ந்த இந்த நிகழ்வு டெல்லியின் விஜய் சவுக்கில் இன்று நடந்தது.
முப்படைகளைச் சேர்ந்த வீரர்கள் வாத்திய கருவிகளை இசைக்க, குடியரசுத் தலைவர் முர்மு விழா நடக்கும் இடத்துக்கு வந்தார். அவரை பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வரவேற்றனர்.
நிகழ்வில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ராணுவப் படை, கடற்படை, விமானப்படை, மாநில போலீஸ், மத்திய ஆயுதப்படை வீரர்கள், இசைக்குழுவினர் அணிவகுப்பு நடத்தினர்.
நிகழ்ச்சியை காண மக்கள் ஆர்வமுடன் திரண்டனர். தேசப்பற்று பாடல்கள் இசைத்தப்படி அணிவகுப்பு நடந்தது. இந்த நிகழ்வால் அப்பகுதியே விழாக் கோலம் பூண்டது.