செங்கடல் வர்த்தகப் பாதைகளைப் பாதுகாக்க இந்தியக் கடற்படை தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
பாலஸ்தீனத்தின் காஸா நகரை தங்களது, கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகள், இஸ்ரேல் நாட்டின் மீது கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான போரை இஸ்ரேல் தொடங்கியது. இந்த போரில் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு சரியான பதிலடியை இஸ்ரேல் கொடுத்து வருகிறது.
இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரில் ஏமனில் செயல்படும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள், ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக உள்ளனர். இதனால், செங்கடல் வழியாக செல்லும், இஸ்ரேலுக்கு ஆதரவான நாடுகளின் கப்பல்கள் மீது ஏவுகணைகள் வீசி தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கப்பல்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருவதால், சூயஸ் கால்வாய் பாதையில் தடங்கல்கள் ஏற்படுத்தி உள்ளது. செங்கடல், உலகளாவிய கொள்கலன் போக்குவரத்தின் 30% உட்பட, உலகளாவிய கடல் வர்த்தகத்தில் கிட்டத்தட்ட 14% உதவுகிறது. ஏறக்குறைய 400 வணிகக் கப்பல்கள் பொதுவாக தெற்கு செங்கடலைக் கடந்து செல்கின்றன. ஆனால், கேப் ஆஃப் குட் ஹோப் பாதை வழியாக மாற்றுவது மிகவும் பொதுவானதாகிவிட்டது.
செங்கடல் பகுதியில் அதிகரித்து வரும் பதற்றம் மற்றும் பாதுகாப்பற்ற தன்மையை போக்கும் வகையில், இந்தியாவின் கடல்சார் நலன்களைப் பாதுகாப்பதற்கான வலிமையான நடவடிக்கைகளை இந்திய கடற்படை செயல்படுத்தி உள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஏடன் வளைகுடா பகுதியில் சென்ற பிரிட்டன் நாட்டின் ‘மார்லின் லுவாண்டா’ என்ற எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடந்தினர். இதையடுத்து, அக்கப்பலிலிருந்து உதவி கோரப்பட்டது. இதைத் தொடர்ந்து, இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ். விசாகப்பட்டினம் போர்க்கப்பல் விரைந்து சென்று, அக்கப்பலிலிருந்த தீயை அணைத்ததோடு, அக்கப்பலிலிருந்த 22 இந்திய பணியாளர்கள் மற்றும் வங்கதேசத்தைச் சேர்ந்த ஒருவரையும் மீட்டது.
வடக்கு மற்றும் மத்திய அரபிக்கடலில் ஏடன் வளைகுடா வரை நடக்கும் சம்பவங்களைக் கண்காணிக்கவும், பதிலளிப்பதற்காகவும் 10-12 போர்க்கப்பல்களை இந்திய அனுப்பி உள்ளது.
உலகளாவிய செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, கடற்படைத் தளபதி அட்மிரல் ஹரி குமார், இந்தியாவின் கடல்சார் நலன்களைப் பாதுகாப்பதற்கும், பிராந்திய ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கும் கடற்படையின் உறுதிப்பாட்டை வலியுறுத்தினார்.
“இந்திய கடல்சார் வர்த்தகம் மற்றும் பிராந்தியத்தில் இயங்கும் வணிகக் கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், நிலையான மற்றும் அமைதியான இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தை பராமரிப்பதற்கு பங்களிப்பு செய்வதற்கும் இந்திய கடற்படை உறுதியுடன் உள்ளது” என்று கூறினார்.
நிலைமை தீவிரமடைந்த போதிலும், அமெரிக்கா தலைமையிலான ‘ஆபரேஷன் ப்ராஸ்பெரிட்டி கார்டியனில்’ இந்தியா சேரவில்லை. அதற்கு பதிலாக ஐக்கிய நாடுகள் சபையால், அங்கீகரிக்கப்பட்ட பணிகளில் மட்டுமே ஈடுபடுவதைத் தேர்ந்தெடுத்தது. இந்த முடிவு தூதரக உறவுகள் மற்றும் சர்வதேச நெறிமுறைகளை பின்பற்றுவதில், இந்தியாவின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.
‘ஆபரேஷன் ப்ராஸ்பெரிட்டி கார்டியனில்’ சேரவில்லையென்றாலும், இந்தியக் கடற்படையின் செயல்பாடுகள், இந்தோ-பசிபிக் பகுதியில் அமெரிக்காவுடன் ஒத்துழைப்புடன், இணைந்திருப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.