ராமர் கோவில் விழாவில் பங்கேற்றதற்காக ஃபத்வாவை எதிர்கொண்டுள்ள இமாம் பிரிவு தலைவர் பதவி விலக மறுப்பு தெரிவித்துள்ளார்.
அயோத்தி ராமர் கோவிலில் குழந்தை ராமர் பிரதிஷ்டை விழா ஜனவரி 22ஆம் தேதி நடைபெற்றது. இதனையொட்டி அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், மத பெரியவர்கள் உள்ளிட்டோருக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. அனைத்திந்திய இமாம் அமைப்பின் தலைவர் டாக்டர் இமாம் உமர் அகமது இலியாசிக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டது. இதனையடுத்து கடந்த 22ஆம் தேதி நடைபெற்ற பிரதிஷ்டை விழாவில் அவர் பங்கேற்றார்.
இந்நிலையில் ராமர் கோவில் விழாவில் பங்கேற்றதால் தமக்கு கொலை மிரட்டல் வருவாக அவர் தெரிவித்துள்ளார். ஜனவரி 22ஆம் தேதி மாலையில் இருந்து எனக்கு மிரட்டல் அழைப்புகள் வந்தன. சில அழைப்புகளைப் பதிவு செய்துள்ளேன். கடந்த 28ஆம் தேதி எனக்கு ஃபத்வா விடுக்கப்பட்டது.
நான் எந்த குற்றமும் செய்யவில்லை. 2 நாள்கள் யோசித்த பின் விழாவில் பங்கேற்ற முடிவு செய்தேன். இதற்காக யாரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை. நான் பதவி விலகவும் மாட்டேன். இந்த நாட்டை மதிப்பவர்கள், என்மீது அன்பு செலுத்துபவர்கள் எனக்கு ஆதரவு அளிப்பார்கள். இதனை ஏற்று கொள்ள முடியாமல் என்னை வெறுப்பவர்கள் பாகிஸ்தானுக்குத்தான் செல்ல வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.