இந்திய அணிக்காக விளையாடிய அனுபவ வீரரான உமேஷ் யாதவ் முன்னாள் கேப்டன் தோனியை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
இந்தியாவில் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் விதர்பா அணி சார்பாக உமேஷ் யாதவ் விளையாடி வருகிறார். இந்தப் போட்டி கடத்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் விதர்பா அணி 204 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகிடது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய ஜார்க்கண்ட் அணி 150 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது.
இதனால் 54 ரன்கள் முன்னிலையுடன் விதர்பா அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. விதர்பா அணி 374 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
இதன் மூலமாக 429 ரன்களை ஜார்க்கண்ட் அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து களமிறங்கிய ஜார்க்கண்ட் அணி வெறும் 120 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
இதில் விதர்பா அணி சார்பாக அனுபவ வீரர் உமேஷ் யாதவ் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். ராஞ்சியில் நடைபெற்ற இந்த போட்டி முடிவடைந்த பின்னர் உமேஷ் யாதவ் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியை நேரில் சென்று சந்தித்துள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு பின் உமேஷ் யாதவ் இந்திய அணியில் இருந்து விளங்கியிருக்கும் நிலையில், கம்பேக் கொடுப்பதற்காக ரஞ்சி டிராபி போட்டிகளில் விளையாடி வருகிறார்.
இவரின் அனுபவத்தின் மூலம் விதர்பா அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி வருகிறார். இந்த நிலையில் தோனியுடனான சந்திப்புக்கு பின் உமேஷ் யாதவ், அந்த புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த புகைப்படத்துடன் உமேஷ் யாதவ் தோனி பற்றி, “ராஜாவை போல் வந்தார்.. லெஜண்ட் போல் வாழ்ந்தார்.. இப்போது ஜென்டில்மேன் என்று அனைவராலும் நினைவில் வைக்கப்படுகிறார்” என்று பதிவிட்டுள்ளார்.
இவரது இந்த பதிவு சிஎஸ்கே மற்றும் தோனி ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், உமேஷ் யாதவ் வரும் ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாட ரூ.5.8 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
வேகப்பந்துவீச்சாளர் உமேஷ் யாதவ், தோனியின் கேப்டன்சிக்கு கீழ் இந்திய அணிக்காக அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.