இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் காட்ஸுடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் காட்சுடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மேற்கு ஆசியா நிலவரம், காசா மீதான தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு விவகாரம் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.
மேலும் செங்கடலில் பல்வேறு வணிக சரக்குக் கப்பல்களை குறிவைத்து ஹூதி போராளிகளால் எழும் பாதுகாப்புக் கவலைகள் குறித்தும் ஆலோசித்ததாக தெரிகிறது.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அமைச்சர் ஜெய்சங்கர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இஸ்ரேலிய வெளியுறவுத்துறை அமைச்சரிடம் ஆலோசனை நடத்தினேன். மேற்கு ஆசியாவில் நிலவும் தற்போதைய நிலை குறித்து விவாதித்தேன். அது சம்பந்தமாக இந்தியாவின் மதிப்பீடுகள் குறித்து பேசினோம். மேலும் அவரை தொடர்பில் இருக்குமாறு கேட்டுக்கொண்டேன் என தெரிவித்துள்ளார்.
இதேபோல் காட்ஸ் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், இஸ்ரேலுடனான நட்பு மற்றும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தேன். பிராந்திய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்து விவாதித்தோம் என தெரிவித்துள்ளார். ஜெய்சங்கரை இஸ்ரேலுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.