பிரதமர் நரேந்திர மோடி பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு, உரத்தட்டுப்பாடு என்ற நிலைமையே இன்று இல்லை எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ஊழலுக்கு எதிரான அண்ணாமலையின் ”என் மண் என் மக்கள்” பாதயாத்திரை ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதியில் நடைப்பெற்றது. இந்த பாதயாத்திரையில் ஆயிரக்கணக்காணோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய அண்ணாமலை,
சோழர்கள் மற்றும் விஜயநகர பேரரசர்களின் கலைத் திறனை வெளிக்காட்டும் கோவில்கள், அர்த்தநாரீஸ்வரர் கோவில், ஆதி திருவரங்கம், சோழபாண்டியபுரம் கல்வெட்டுக்கள், ஜம்பை கோவில் என வரலாற்றுச் சிறப்புடன், ஆய்வாளர்களின் பயிற்சி பகுதியாக விளங்கி வருகிறது.
கடந்த 2011ஆம் ஆண்டு கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வெற்றி பெற்று, சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராகும் வாய்ப்பை அளித்த தொகுதி. நமது மத்திய அரசு அவருக்கு பத்ம பூஷண் விருது வழங்கி பெருமைப்படுத்தியுள்ளது. முழுக்க முழுக்க கிராமங்களை மட்டுமே கொண்ட விவசாயம் சார்ந்த பகுதி.
கடந்த 2010ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், அன்றைய தமிழக முதலமைச்சர் கருணாநிதி, அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில், தமிழகத்தில் DAP (Di-ammounium Phosphate) தட்டுப்பாடு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். கடந்த 2011 ஆம் ஆண்டு மே மாதம், அன்றைய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அம்மையார் அவர்கள், அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு, எழுதிய கடிதத்தில் 27,000 டன் DAP உரம் தமிழகத்திற்கு குறைவாக வந்துள்ளது என்றும் இதனால் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
கடந்த 2013ஆம் ஆண்டு ஜனவரி மாதம், மத்திய உரத்துறையில் மானியம் வழங்குதல் மற்றும் விலை நிர்ணயம் ஆகியன தொடர்பான விவகாரத்தை பயன்படுத்தி உர நிறுவனங்களுக்கு லாபம் கிட்டுமாறு 1,000 கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளதாக மு.க. அழகிரி மீது அம்மையார் ஜெயலலிதா குற்றம் சாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
2012ஆம் ஆண்டு ஜூன் மாதம் குறுவை சாகுபடிக்கு தேவையான அளவு உரத்தை, மத்திய அரசு ஒதுக்க வேண்டும் என்றும் உர விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி, பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு அம்மையார் ஜெயலலிதா கடிதம் எழுதினார்.
இவையெல்லாம் முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தமிழக முதல்வர்கள் எழுதிய பல கடிதங்களுக்கான சில எடுத்துக்காட்டுக்கள். ஆனால் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு, உரத்தட்டுப்பாடு என்ற நிலைமையே இன்று இல்லை.
இந்தியாவில் உர உற்பத்தி 2014-15 ஆண்டில் 385 லட்சம் மெட்ரிக் டன் இருந்தது, 2022-23 ஆம் ஆண்டில் 485 லட்சம் மெட்ரிக் டன் ஆக, 9 ஆண்டுகளில் 100 லட்சம் மெட்ரிக் டன் உர உற்பத்தி உயர்ந்துள்ளது. நமது தேவைக்கு வெளிநாடுகளை எதிர்நோக்கும் நிலைமை இன்று குறைந்துள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் மானிய விலையில் யூரியா உரம் கிடைக்க மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் செலவிட்ட தொகை 4,24,500 கோடி ரூபாய்.
தமிழகத்தில் மானிய விலையில் உரம் வாங்கி பயன் பெற்ற விவசாயிகளின் மொத்த எண்ணிக்கை 27,35,187. வெளிச்சந்தை மதிப்பு மூட்டைக்கு ரூ.3,000 ஆக இருக்கும் 45 கிலோ மூட்டை யூரியா, நமது விவசாயிகளுக்கு வெறும் 242 ரூபாய்க்கு நமது மத்திய அரசு வழங்குகிறது.
ஒரு ஹெக்டர் விவசாய நிலத்திற்கு உர மானியமாக நமது மத்திய அரசு செலவிடும் தொகை 8,909 ரூபாய். இந்த வருடம் ஜூன் மாதம், PRANAM திட்டத்தின் கீழ், அடுத்த 3 வருடங்களுக்கு (2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை) யூரியாவுக்கு 3.7 லட்சம் கோடி ரூபாய் மானியம் வழங்கிட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நமது பாரத பிரதமர் மோடி அவர்கள் அறிவித்துள்ளார். மத்தியில் லஞ்சம் ஊழல் இல்லாத அரசு அமைந்திருப்பதால், அனைத்து நிதியும் பொதுமக்கள் நலத்திட்டங்களுக்கே செலவிடப்படுகின்றன.
ஆனால் தமிழகத்தில், குடும்ப, ஊழல் ஆட்சி நடைபெறுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் வாரிசு அரசியல் நடத்துகிறது திமுக. ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே திமுகவில் பதவிக்கு வர முடியும். இளைஞர்களுக்கோ, தொண்டர்களுக்கோ வாய்ப்பு இல்லை.
தங்கள் குடும்பம் நன்றாக இருக்க, தொடர்ந்து ஊழலில் ஈடுபட்டு, பொதுமக்கள் நலனை கவனிப்பதே இல்லை. ரிஷிவந்தியத்தில் தொழில்சார் பட்டையப் படிப்புகளுக்கான கல்வி நிறுவனங்கள் இல்லை, விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகளும் இல்லை.
இத்தனை ஆண்டுகளாக எப்படி முன்னேற்றமில்லாமல் இருந்ததோ, அப்படியே தான் ஆண்ட ஆளும் கட்சிகள் ரிஷிவந்தியம் தொகுதியை வைத்திருக்கிறார்கள். ரிஷிவந்தியத்தை தாலுகாவாக உயர்த்துவோம் என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்துவிட்டு, அதைக் கூட நிறைவேற்றாமல், தொகுதி ஒருபக்கம் தாலுகா ஒருபக்கம் என்று மக்களை அவதிக்குள்ளாகிறார்கள். மக்கள் போராட்டம் நடத்தியும் எந்த நடவடிக்கையும் இல்லை.
ரிஷிவந்தியத்தில் நெல் கொள்முதல் நிலையம், மணலூர்பேட்டை தென்பெண்ணை ஆற்றில் தடுப்பணை, மணலூர்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவமனையாக தரம் உயர்த்துவது என எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாமல், 99% தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாகப் பொய் கூறுகிறார் முதலமைச்சர்.
வரும் பாராளுமன்றத் தேர்தலில், ஊழல், குடும்ப அரசியல் நடத்தும் கட்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். நேர்மையான அரசியல் மாற்றம் தமிழகத்தில் உருவாக வேண்டும். பத்து ஆண்டுகளாக, தூய்மையான மக்கள் நலனை முன்னிறுத்தி ஆட்சி நடத்தும் மாண்புமிகு பாரதப் பிரதமர் கரங்களை வலுப்படுத்த, இம்முறை தமிழகம் முழுவதும் பாஜக கூட்டணி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.