பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளியான முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் மஹ்முத் குரேஷி ஆகியோருக்கு சைபர் வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கி பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. நில மோசடி, தோக்ஷகானா எனும் கருவூல ஊழல், அரசு ரகசியங்களை கசியவிட்டது, அரசு சொத்துகளை தவறாக பயன்படுத்தியது என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
இதில் பிரதமராக இருந்தபோது தனக்கு பரிசாக வந்த பொருட்களை அவர் கருவூலத்தில் வழங்காமல் பயன்படுத்தியது தெரியவந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு கடந்த வருடம் 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கியது. இதையடுத்து இம்ரான் கான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பிறகு இந்த தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது.
ஆனாலும் இம்ரான் கான் வெளிவர முடியவில்லை. ஏனென்றால் இன்னொரு வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார். அதாவது பாகிஸ்தான் பிரதமர் அலுவலகத்தில் பிரதமராக இருக்கும் நபர் உயரதிகாரிகளுடன் விரைவாக பேசும் வகையில் சைபர் கேபிள் சேவை பயன்பாடு உள்ளது.
இந்த கேபிள் சேவையை இம்ரான் கான் பிரதமராக இருந்தபோது தவறாக பயன்படுத்தியதாக எழுந்த புகாரை தொடர்ந்து பதிவு செய்யப்பட்ட வழக்கில் இம்ரான் கான் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் தான் இம்ரான் கான் மீதான சைபர் கேபிள் முறைகேடு வழக்கில் பாகிஸ்தான் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது. அதன்படி இம்ரான் கான் மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளியான முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் மஹ்முத் குரேஷி ஆகியோருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தானில் இன்னும் சில தினங்களில், தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த தீர்ப்பு இம்ரான் கானின் அரசியல் வாழ்க்கைக்கு தடையாக உள்ளது.