டெல்லியில் உள்ள ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் வீட்டில் அமலாக்கத்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.36 லட்சம் ரொக்கம், பிஎம்டபிள்யூ சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் மீது சுரங்க ஒதுக்கீடு வழக்கு, நில மோசடி வழக்கு உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இந்த இரு வழக்குகள் தொடர்பாகவும் அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சூழலில், நில மோசடி வழக்கு தொடர்பாக, நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால், 7 முறை சம்மன் அனுப்பியும் ஹேமந்த் சோரன் ஆஜராகவில்லை. இதையடுத்து ஜனவரி 30ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு 8-வது முறையாக சம்மன் அனுப்பப்பட்டது.
சோரனின் தெற்கு டெல்லி இல்லத்திற்கு அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்த நேற்று சென்றனர். ஆனால் அவர் வீட்டில் இல்லை. இதனால் அமலாக்கத்துறையினர் சுமார் 13 மணி நேரம் அங்கேயே முகாமிட்டனர்.
இதனிடையே முதல்வர் தலைமறைவாகியுள்ளதாகவும் ஆளுநர் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும் என பாஜகவினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஹேமந்த் சோரன் டெல்லி இல்லத்தில் இருந்து ரூ. 36 லட்சம் பணம், பிஎம்டபிள்யூ கார் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாக அமலாக்கத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மாயமான ஹேமந்த் சோரன் ராஞ்சியில் உள்ள இல்லத்திற்கு இன்று திடீரென வருகை தந்தார். மேலும் சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்ட அவர், வரும் புதன்கிழமை அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகவுள்ளதாக தெரிவித்துள்ளார்.