ஜார்கண்ட் மாநிலம் கோடா மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில், சக ஆசிரியர் இரண்டு ஆசிரியர்களைச் சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்கண்ட் மாநிலம் கோடா மாவட்டம் பொரையாஹட் பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. ராஞ்சியில் இருந்து சுமார் 300 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இப்பள்ளியில், ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று காலை 11 மணியளவில், பள்ளியின் ஆசிரியர் ஒருவர் சக ஆசிரியர்களைத் துப்பாக்கியால் சுட்டுள்ளார். அவரும் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டார்.
இதுகுறித்து பள்ளியில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
இதுகுறித்து கோடா காவல் கண்காணிப்பாளர் நாது சிங் மீனா கூறியதாவது, “ஒரு பெண் உட்பட இரண்டு ஆசிரியர்களின் உடல்கள் பள்ளியில் ஒரு அறையில் இரத்த வெள்ளத்தில் கிடந்தன. குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியரும் பலத்த காயத்துடன் காணப்பட்டார் என்று கூறினார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரு ஆசிரியர் சக ஆசிரியர்களைச் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.