நில மோசடி தொடர்பாக பீகார் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி பிரசாத் யாதவ் அமலாக்கத்துறை விசாரணைக்கு இன்று ஆஜரானார்.
நில மோசடி தொடர்பாக யாதவ் மீது சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் பணமோசடி வழக்கை மத்திய ஏஜென்சி விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் ஜனவரி 19 ஆம் தேதி யாதவுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது. இதேபோன்ற வழக்கில் நேற்று ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத்திடம் சுமார் 10 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில் பாட்னாவில் நில மோசடி தொடர்பாக முன்னாள் துணை முதல்வரும் ஆர்ஜேடி தலைவருமான தேஜஸ்வி பிரசாத் யாதவிடம் அமலாக்க இயக்குனரகம் இன்று விசாரணை நடத்தியது. இது தொடர்பாக பாட்னாவில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தேஜஸ்வி பிரசாத் யாதவிடம் கேள்விக் கேட்டு விசாரணை மேற்கொண்டனர்.
2004 முதல் 2009 வரை ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ரயில்வே அமைச்சராக லாலு பிரசாத் யாதவ் இருந்தார். அப்போது, குருப் டி பிரிவுக்கு தற்காலிக பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் லஞ்சமாக நிலங்களைக் கொடுத்ததை அடுத்து நிரந்தரப் பணியாளர்களாக ஆக்கப்பட்டனர்.
லாலு பிரசாத் யாதவின் மனைவி ராப்ரி தேவி, மிசா பாரதி உள்ளிட்டோரின் பெயர்களில் நிலங்கள் குறைந்த விலைக்கு விற்கப்பட்டு பத்திரப் பதிவு நடைபெற்றுள்ளது. இந்த ஊழலில், லாலு பிரசாத் யாதவ், ராப்ரி தேவி, மிசா பாரதி, தேஜஸ்வி யாதவ், அப்போதைய ரயில்வே பொது மேலாளர் உள்பட மொத்தம் 17 பேர் மீது அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது. கடந்த 2022, மே 18 ஆம் தேதி இது தொடர்பாக பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் மீது விசாரணை நடத்தப்பட்டு, கடந்த 2023, அக்டோபர் மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.