மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் வி. அனந்த நாகேஸ்வரன் மற்றும் அவரது பொருளாதார நிபுணர்கள் குழு தயாரித்த இந்தியப் பொருளாதாரம் குறித்து ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. இந்த அறிக்கை கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரப் பயணத்தை விரிவாக எடுத்துக்காட்டுகிறது. அந்த அறிக்கையின் உள்ள முக்கிய அம்சங்களை விரிவாக பார்க்கலாம்.
வளர்ந்து வரும் இடையூறுகளை எதிர்கொள்வதில் இந்தியா நம்பிக்கையுடன் உள்ளது. 2024 மற்றும் 2025 ஆம் நிதி ஆண்டுக்கான வளர்ச்சி விகிதம் 7 சதவிகிதம் அல்லது அதற்கு மேல் இருக்கும் என்று கணித்துள்ளது. மேலும் 2030ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் பொருளாதாரம் 7 டிரில்லியன் டாலர்களை எட்டும் என்று கணித்துள்ளது. கச்சா எண்ணெய் விநியோகத்தில் இந்தியாவின் திறமையான நிர்வாகத்தையும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
உள்கட்டமைப்பை கட்டியெழுப்புவதில் அரசாங்கத்தின் முன்னேற்றத்தை அறிக்கை பாராட்டியுள்ளது. பொதுத்துறை மூலதன முதலீடு 2015ஆம் ஆண்டு இல் 5.6 லட்சம் கோடி ரூபாயில் இருந்து 2024ஆம் நிதியாண்டில் 18.6 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
நெடுஞ்சாலைகள், சரக்கு வழித்தடங்கள், விமான நிலையங்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் கடல்வழி இணைப்புகள் ஆகியவற்றில் ஏற்பட்ட முன்னேற்றங்களை அறிக்கை விவரிக்கிறது. இது டிஜிட்டல் உள்கட்டமைப்பில் உறுதியான வளர்ச்சியைக் காட்டுகிறது.
வலுவான இருப்பு நிலை,கடன் வழங்குதல் மற்றும் வலுவான உணவு அல்லாத கடன் வளர்ச்சி ஆகியவற்றுடன் இந்தியாவின் நிதித் துறையும் ஆரோக்கியமான நிலையில் உள்ளது.51 கோடி ஜன்தன் யோஜனா வங்கிக் கணக்குகள், 2.1 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வைப்புத் தொகையை வைத்திருப்பது, இந்திய குடும்பங்களிடையே நல்ல நிதி ஆரோக்கியத்தைக் காட்டுவதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.