இந்தியா மாலத்தீவு இடையே மோதல் தொடரும் நிலையில், மாலத்தீவு அதிபர் பாரத பிரதமர் மோடியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கை அந்த நாட்டிலேயே எழுந்துள்ளது.
இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையே கடந்த சில காலமாகவே மோதல் நிலவி வருகிறது. மாலத்தீவில், அதிபர் முகமது முய்சு தலைமையில், மக்கள் தேசிய காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. இவர் ஒரு சீன ஆதரவாளர்.
நம் நாட்டுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ள முகமது முய்சு மீது முக்கிய எதிர்க்கட்சிகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளன.
இதன் எதிரொலியாக கடந்த சில தினங்களுக்கு முன் பார்லி., சிறப்பு கூட்டத்தில் ஆளும் கூட்டணி கட்சி எம்.பி.,க்களுக்கும் எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயக கட்சி எம்.பி.,க்களுக்கும் இடையே நடந்த அடிதடி வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது.
இதன் எதிரொலியாக அதிபர் முகமது முய்சுக்கு எதிராக பாராளுமன்றத்தில் கண்டன தீர்மானம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய மக்களிடம் மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸூ முறையாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஜும்ஹூரி கட்சித் தலைவர் காசிம் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியா மற்றும் மோடி குறித்து மூன்று மாலத்தீவு அமைச்சர் சர்ச்சை கருத்துகளைக் கூறியிருந்த நிலையில், இப்ராஹிம் இப்படியொரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், “சீனா பயணத்திற்குப் பிறகு அவர் தெரிவித்த கருத்துகளுக்கு இந்திய அரசு மற்றும் பிரதமர் மோடியிடம் முறைப்படி மன்னிப்பு கேட்குமாறு மாலத்தீவு அதிபர் முய்ஸுவை நான் கேட்டுக்கொள்கிறேன்.
இந்தியா மற்றும் மாலதீவுகளுக்கு இடையேயான உறவு மோசமடைந்து வருவது கவலையை ஏற்படுத்துகிறது. எந்தவொரு நாட்டைப் பற்றியும், குறிப்பாக அண்டை நாடு குறித்து, அந்த நாடு உடனான உறவைப் பாதிக்கும் வகையில் நாம் பேசக்கூடாது. நமது நாட்டிற்கு என்று ஒரு கடமை உள்ளது, அதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
‘இந்தியா அவுட்’ என்ற ஆபத்தான பிரச்சாரத்தை முய்ஸு கையில் எடுத்துள்ளார். இதனால் தேவையில்லாத பிரச்சினைகள் உருவாகும். தற்போதைய அதிபருக்கு முன்பு ஆதரவாக இருந்தவர்களே கூட முய்ஸு நடவடிக்கைகளைக் கேள்வி எழுப்புகின்றனர்.
இந்தியர்களை வெளியேறச் சொல்வது நமது நாட்டிற்கு நஷ்டத்தை மட்டுமே விளைவிக்கும். இந்த நடவடிக்கை தேவையில்லாதது. அதைச் செய்யக் கூடாது என்றே நான் முய்ஸுவிடம் கூறுவேன்” என்று அவர் கூறியுள்ளார்.