நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி பேர் ஏழ்மையில் இருந்து மீட்கப்பட்டு உள்ளனர் எனக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.
நடப்பு ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் குடியரசுத் தலைவர் உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது.
கூட்டத்தில் உரையாற்றிய குடியரசுத் தலைவர்,
புதிய பார்லிமென்டில் இன்றைய உரை எனது முதல் உரையாகும். ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற இலக்குடன் பயணித்து வருகிறோம். சுதந்திர அமிர்த பெருவிழாவின் பெருமையை வளர்ச்சியடைந்த பாரதம் உறுதி செய்யும். நமது அரசியல் சாசனம் அமல்படுத்தப்பட்டு 75 ஆண்டுகள் ஆகின்றன.
சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா மிஷன் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
சந்திரயான் 3 திட்டத்தின் வெற்றியால் நிலவின் தென் துருவத்தில் பாரதத்தின் மூவர்ண கொடி பட்டொளி வீசி பறக்கிறது. வரலாற்று சிறப்பு மிக் மகளிர் 33% இட ஒதுக்கீட்டு மசோதாவை பார்லிமென்ட் நிறைவேற்றி உள்ளது.
உலக அரங்கில் இந்தியா கம்பீரமான வளர்ச்சி பெற்று வருகிறது. நாடு தற்போது வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக மாறி உள்ளது.கடந்த 6 மாதமாக பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பம் மிக வேகமாக அமல்படுத்தப்பட்டு உள்ளது. சென்ற ஆண்டு லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.
மக்களின் நீண்ட நாட்கள் எதிர்பார்ப்பான அயோத்தி ராமர் கோவில் கட்டுமானம் செய்யப்பட்டு உள்ளது. ராமர் கோயில் கட்ட வேண்டும் என்ற கனவு நிறைவேற்றப்பட்டு உள்ளது. டிஜிட்டல் பணபரிவர்த்தனை உள்ளிட்ட டிஜிட்டல் மயமாக்கல் நடைவடிக்கையால், இந்தியர்களின் வாழ்க்கை எளிதாகியுள்ளது.
11 கோடி வீடுகளுக்கு குழாய் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. 80 கோடி குடும்பங்களுக்கு இலவச ரேசன் வழங்கப்பட்டுள்ளது.
நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி பேர் ஏழ்மையில் இருந்து மீட்கப்பட்டு உள்ளனர். வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 3 கோடியில் இருந்து 8 கோடியாக உயர்ந்துள்ளது. ஜிஎஸ்டி வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது எனத் தெரிவித்தார்.