நாட்டில் உள்ள 18 வயது நிரம்பிய அனைத்து இந்தியக் குடிமக்களுக்கும் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை உள்ளது. நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கும் பங்கு பொது மக்களிடம் உள்ளது என்பதை உணர்த்தும் வகையில், ஜனநாயக முறையில் தேர்தல் நடத்தப்படுகிறது.
இப்படி வாக்களிப்பதற்கு, அடிப்படை ஆதாரமாக இந்தியத் தேர்தல் ஆணையம் வாக்காளர் அடையாள அட்டையை வழங்கியுள்ளது. இது இல்லாமல் பலரால் வாக்களிக்க முடியாமல் போகிறது. வாக்காளர் அடையாள அட்டையின் முக்கியத்துவம் குறித்து ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் தெரியும்.
தமிழகத்தில் வாக்களிக்கத் தகுதி படைத்தவர்களுக்கு, இந்தியத் தேர்தல் ஆணையம் வாக்காளர் அடையாள அட்டை வழங்கி வருகிறது. தமிழகத்திற்கு, தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாவின் வாக்காளர் அடையாள அட்டை காணவில்லை என கூறப்படுகிறது. இந்த அட்டை, இந்தியத் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டது ஆகும். அடையாள அட்டையைக் காணவில்லை என அவர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தின் தலைமைத் தேர்தல் அதிகாரியே தனது வாக்காளர் அடையாள அட்டையைக் காணவில்லை என புகார் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.