தமிழ் வழியில் கல்வி பயின்றவர்கள் அதற்கான சான்றிதழை, பல்கலையில் பெறலாம் என அரசு அறிவித்துள்ளது.
தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு, தமிழக அரசுப் பணிகளில் முன்னுரிமை அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படுகிறது.
இதனால், நேரடி நியமன காலி பணியிடங்களில், 20 சதவீதம் பணியிடங்கள், தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
1-ம் வகுப்பு முதல் முழுமையாகத் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு மட்டுமே, 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து, தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில், அரசுப் பணியில் முன்னுரிமை அடிப்படையில் நியமனம் பெற விரும்புவார்கள், அதாவது, தமிழ் வழியில் கல்வி கற்றதற்கான சான்றிதழ் பெற விரும்புவோர், தாங்கள் படித்த கல்லூரி மூடப்பட்டிருந்தால், பல்கலையில் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், உயர் கல்வி, வேளாண், மக்கள் நல்வாழ்வு, கால்நடை பராமரிப்பு, பால் வளம், மீன் வளம், சட்டத்துறை ஆகிய கல்லூரிகளில் படித்தவர்கள் பயன் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.