பாகிஸ்தானில் இம்ரான் கானுக்கு ஆதரவாக நடந்த பேரணியில் குண்டுவெடித்ததில், 4 பேர் உயிரிழந்தனர். அந்நாட்டில் வரும் 8-ஆம் தேதி பொதுத்தேர்தல் நடக்கவுள்ள நிலையில், இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணத்தில் குவெட்டா நகரில், நேற்று இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் பேரணி நடத்தினர். இம்ரான்கானுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அவர்கள் இருசக்கர வாகனங்களில் ஊர்வலமாக சென்றனர்.
அக்கட்சியின் கொடியை கையில் ஏந்தியபடி, பல்வேறு முழக்கங்களை எழுப்பியவாறு சென்று கொண்டிருந்தனர். அப்போது, ஊர்வலத்தில் திடீரென குண்டுவெடிப்பு நடந்தது. இந்த குண்டுவெடிப்பில், அக்கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த 6 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் ஒரு சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
பாகிஸ்தானில் வரும் பிப்ரவரி மாதம் 8-ஆம் தேதி பொது தேர்தல் நடக்க உள்ள நிலையில், இந்த குண்டு வெடிப்பு சம்பவம் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.