தலைநகர் டெல்லியில் நிலவும் மோசமான வானிலை காரணமாக, விமானங்கள் மற்றும் இரயில்கள் தாமதமாக புறப்பட்டது. மேலும், 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது.
கடந்த சில மாதங்களாக வட மாநிலங்களில் அதிக அளவிலான பனிப்பொழிவு நிலவி வருகிறது. குறிப்பாக, தலைநகர் டெல்லி, காஷ்மீர், இமாச்சல பிரதேசம், பஞ்சாப், உத்தரபிரதேசம், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் பனிப்பொழிவு கடுமையாக உள்ளது.
வட மாநிலங்களில் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் குளிரின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால், பொது மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உடலை வாட்டி வதைக்கும் கடும் குளிரில் இருந்து மக்கள் தங்களைக் காத்துக் கொள்ள சாலையோரங்களில் தீ மூட்டி குளிர் காய்கின்றனர்.
குளிரின் தாக்கம் அதிகமாக உள்ளதால், வாகனங்கள் இயக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும், சாலைகள் முழுவதும் பனிமூட்டம் சூழ்ந்துள்ளதால், வாகனங்கள் பகல் நேரங்களிலும், முகப்பு விளக்கை ஒளிரவிட்டபடி செல்கின்றன.
மோசமான வானிலை காரணமாக, டெல்லிக்கு வரும் விமானங்கள் மற்றும் புறப்பட வேண்டிய விமானங்கள் தாமதமானது. மேலும் சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
அதன்படி, டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் 51 விமானங்கள் தாமதமாக சென்றது. மேலும், 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. இதேபோல, இரயில்கள் பலவும் தாமதமாக சென்றது. இதனால், விமான நிலையங்கள் மற்றும் இரயில் நிலையங்களில் பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.