கூட்டணிக்கு வேறு பெயரை தேர்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினேன். கூட்டணிக்காக மிகவும் முயற்சித்தேன். ஆனால், அவர்கள் ஒன்றுகூட செய்யவில்லை. ஆகவே, கூட்டணியில் இருந்து வெளியேறினேன் என்று பீகார் முதல்வர் நிதீஷ்குமார் தெரிவித்திருக்கிறார்.
பீகார் மாநில முதல்வர் நிதீஷ்குமார் “இண்டி” கூட்டணியில் இருந்து வெளியேறி, மீண்டும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்திருக்கிறார். இதையடுத்து, “இண்டி” கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பலரும் நிதீஷ்குமாரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில், முதல்வர் நிதீஷ்குமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “கூட்டணிக்கு வேறு பெயரைத் தேர்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தேன். ஆனால், அவர்கள் ஏற்கெனவே அப்பெயரை இறுதி செய்து முடித்து விட்டார்கள்.
மேலும், கூட்டணிக்காக நான் மிகவும் கடினமாக முயற்சித்தேன். ஆனால், அவர்கள் ஒன்றுகூட செய்யவில்லை. அதோடு, எந்தக் கட்சி எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பதைக்கூட இன்று வரை முடிவு செய்யவில்லை. இதனாலேயே நான் அவர்களை விட்டுவிட்டு முதலில் யாருடன் இருந்தேனோ அவர்களுடன் திரும்பி விட்டேன்.
நான் பீகார் மக்களுக்காகத் தொடர்ந்து பணியாற்றுவேன். ஜாதிவாரி கணக்கெடுப்பு எப்போது நடந்தது என்பதை ராகுல் காந்தி மறந்து விட்டாரா? 9 கட்சிகள் முன்னிலையில் நடத்தினேன். 2019 – 2020-ம் ஆண்டுகளில் சட்டப்பேரவை முதல் பொதுக்கூட்டம் வரை எல்லா இடங்களிலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது பற்றி பேசினேன்” என்றார்.