ஐசிசி-யின் மகளிர் டி20 கிரிக்கெட் போட்டி பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் தீப்தி சர்மா இறவாண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், மகளிர் டி20 கிரிக்கெட்டின் பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதில் இந்தியாவின் தீப்தி சர்மா ஒரு இடம் முன்னேறி 2-வது இடத்தை பாகிஸ்தானின் சதியா இக்பாலுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். இருவரும் தலா 718 புள்ளிகள் பெற்றுள்ளனர்.
மற்றொரு இந்திய வீராங்கனையான ரேணுகா சிங் ஒரு இடம் முன்னேறி 10-வது இடத்தை பிடித்துள்ளார். முதல் இடத்தில் இங்கிலாந்தின் சோஃபி எக்கல்ஸ்டோன் 777 புள்ளிகளுடன் ஆதிக்கம் செலுத்துகிறார்.
மற்றொரு இங்கிலாந்து வீராங்கனையான சாரா கிளென் 4-வதுஇடத்தில் தொடர்கிறார். தென் ஆப்பிரிக்காவின் நோன்குலு லேகோ லபா 3 இடங்கள் பின்தங்கி 5வது இடத்துக்கு இறங்கி உள்ளார்.
பாகிஸ்தானின் நஷ்ரா சாந்து 6-வது இடத்திலும், இலங்கையின் இனோகா ரனவீரா7-வது இடத்திலும், மேற்கு இந்தியத் தீவுகளின் ஹேலி மெத்தியூஸ் 8-வது இடத்திலும், நியூஸிலாந்தின் ஃப்ரான் ஜோனாஸ் 9-வது இடத்திலும் உள்ளனர்.
ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் தீப்திசர்மா 4-வது இடத்தில் தொடர்கிறார். பேட்டிங் தரவரிசையில் ஸ்மிருதி மந்தனா 4-வது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.
ஜெமிமா ரோட்ரிக்ஸ் 13-வது இடத்திலும், ஷபாலி வர்மா 16-வது இடத்திலும், ஹர்மன்பிரீத் கவுர் 17-வது இடத்திலும் தொடர்கின்றனர். ஆஸ்திரேலியாவின் பெத் மூனி, தஹ்லியா மெக்ராத் ஆகியோர் முதல் இரு இடங்களில் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.
















