2 ஆயிரத்து 500 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய பேபால் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
கொரோனா பெருந்தோற்று, ரஷ்யா – உக்ரைன் போர், இஸ்ரேல் – ஹமாஸ் போர் உள்ளிட்ட சர்வதேச நிகழ்வுகளால், உலக நாடுகளின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச பிரச்னைகளால், பெரிய நிறுவனங்கள் மட்டுமின்றி, சிறு, குறு தொழில் நிறுவனங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பொருளாதார நெருக்கடி காரணமாக, கடந்த சில ஆண்டுகளாக, பல முன்னணி நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறது.
இந்நிலையில், பேபால் நிறுவனம், 2,500 ஊழியர்களை நீக்க முடிவு செய்துள்ளது.
1998-ஆம் ஆண்டு அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் பேபால் நிறுவனம் தொடங்கப்பட்டது. இது இணையதளம் வழியாக பண பரிமாற்றங்களை அனுமதிக்கும் நாடுகளில், பயனர்களுக்கு பண பரிமாற்ற செயலி மூலம் சேவைகளை வழங்கி வரும் ஒரு பன்னாட்டு நிறுவனமாகும். இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக அலெக்ஸ் க்ரிஸ் உள்ளார்.
தற்போது, அவர் ஊழியர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, ஒரு சங்கடமான செய்தியை இன்று தெரிவிக்க விரும்புகிறேன். உலகளவில் உள்ள நமது ஊழியர்களின் எண்ணிக்கையில் 9 சதவீதம் அளவிற்கு குறைக்கப்பட உள்ளது (அதாவது சுமார் 2 ஆயிரத்து 500 ஊழியர்கள்).
இந்த பட்டியலில் உள்ள ஊழியர்களின் பெயர் இந்த வார இறுதிக்குள் அவர்களுக்கு தெரிவிக்கப்படும். பணியில் நீக்கப்படும் ஊழியர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்ய தயாராக இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.