நாடாளுமன்ற இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.
ஒவ்வொரு முறையும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக, பழைய அரசாங்கம் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வது வழக்கமாக இருக்கிறது. புதிய அரசு அமைந்த பிறகு, முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். அந்த வகையில், மக்களவைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இதில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றினார். இந்நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று இடைக்கால மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இது அவர் தாக்கல் செய்யும் 6-வது பட்ஜெட் ஆகும்.
முன்னதாக குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை நிர்மலா சீதாராமன் சந்தித்து வாழ்த்துபெற்றார். அவருக்கு குடியரசு தலைவர் இனிப்பூட்டினார். இதனிடையே இன்று காலை பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதிடில இடைக்கால பட்ஜெட்டிற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
பெட்ரோல் டீசல் மீதான வரி குறைப்பு, விவசாயிகளுக்கான உரமானியம், பயிர் காப்பீடு, பெண்களுக்கான நிதி உதவி திட்டங்கள் பற்றிய அறிவிப்புகள் இன்றைய பட்ஜெட்டில் இடம் பெறலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன.