அடுத்த 5 ஆண்டுகளில் கிராமப்புறங்களில் 2 கோடி வீடுகள் கட்டப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று 2024 – 2025 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார் . அப்போது பேசிய அவர், நாட்டின் பணவீக்கம் அதிகமாக இருந்தபோது ஜி20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்தாக தெரிவித்தார்.
அடுத்த 5 ஆண்டுகளில் கிராமப்புறங்களில் 2 கோடி வீடுகள் கட்டப்படும் என்றும், ஒரு கோடி வீடுகளில் சூரிய ஒளி மின்சாரம் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
1 கோடி வீடுகளில் மொட்டை மாடியில் சோலார் பேனல் அமைத்தால் மாதத்திற்கு 300 யூனிட் மின்சாரம் இலவசம் என்றும், இதன்மூலம் மாதம் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.18 ஆயிரம் வரை வருமானம் ஈட்டலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாடு முழுவதும் மருத்துவக்கல்லூரிகள் அமைப்பது தொடர்பாக தனிக் குழு அமைக்கப்படும் என்றும், ஏற்கனவே உள்ள மருத்துவமனைகளில் புதிதாக மருத்துவக்கல்லூரிகள் அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
வளர்ந்த நாடு என்ற இந்தியாவின் கனவு 2027க்குள் நனவாகும் என்றும், நாட்டை வளர்ச்சியடைந்த நாடாக மாற்ற அடுத்த 5 ஆண்டுகளில் மிகப்பெரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தற்போது நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.
பால் உற்பத்தியை அதிகரிக்க புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், 9-14 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு கர்ப்பப்பை புற்றுநோயை தடுப்பதற்கான தடுப்பூசி போடப்படும் என்றும் அவர் தெரிவித்தார். நாடு முழுவதும் மின்சார வாகனங்களுக்கான பேட்டரி சார்ஜிங் மையங்கள் அதிகரிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் அனைத்து அங்கன்வாடி ஊழியர்களும் சேர்க்கப்படுவார்கள் என்றும், 40,000 சாதாரண ரெயில் பெட்டிகள் ‘வந்தே பாரத்’ தரத்தில் புதுப்பிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தொழில் தொடங்க வட்டியில்லாக் கடன் வழங்குவதற்காக ரூ.1 லட்சம் கோடியில் புதிய நிதியம் அமைக்கப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.