வருமான வரி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது, ரூ. 7 லட்சம் வரையிலான தனிநபர் வருமானத்திற்கு வரி செலுத்த தேவையில்லை என தெரிவித்தார்.
வரி செலுத்துபவர்கள் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவு உயர்ந்துள்ளது என்றும், 10 ஆண்டுகளில் வரி செலுத்துவோர் எண்ணிக்கை 2.4 மடங்கு அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். வருமான வரி செலுத்தும் நடைமுறை தற்போது எளிமையாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். முறையாக வருமான வரி செலுத்தபர்களுக்கு அவர் நன்றி தெரிவித்துக்கொண்டார்.
2024-25 ஆம் நிதியாண்டில் நாட்டின் நிதிப் பற்றாக்குறை 5.1 % கட்டுப்படுத்தப்படும் என்றும், 2023-24ல் திருத்தப்பட்ட மதிப்பீட்டின் படி அரசின் செலவு ரூ.40.90 லட்சம் கோடி என அவர் தெரிவித்தார்.
2025-26ம் ஆண்டிற்குள் நிதி பற்றாக்குறை 4.5 சதவீதத்திற்கும் கீழ் குறைக்க திட்டமிட்டுள்ளதாகவும், பாதுகாப்புத்துறையில் முதலீடு 11.1 சதவீதமாக உயர்த்தி 11,11,111 கோடி ரூபாயாக அதிகரிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
பாதுகாப்புத்துறையில் முதலீடு மொத்த உள்நாட்டு வளர்ச்சியான ஜிடிபி.,யில் 3.4 சதவீதமாக இருக்கும் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.