புது தில்லியில் இந்தியக் கடலோரக் காவல்படை தனது 48-வது அமைப்பு தினத்தை நேற்று பிப்ரவரி 1-ம் தேதியன்று கொண்டாடியது.
கடந்த 1977-ஆம் ஆண்டு பிப்ரவரி 1-ஆம் தேதி, இந்திய கடலோர பாதுகாப்பை உறுதி செய்வதில், கப்பற்படைக்கு உதவும் விதமாக, கடலோரக் காவல்படை உருவாக்கப்பட்டது. கடலோர காவல் படையினரின் அர்ப்பணிப்பைப் பாராட்டும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 1-ஆம் தேதி கடலோர காவல்படை தினம் கொண்டாடப்படுகிறது.
இது 1977-ம் ஆண்டில் ஒரு சாதாரண தொடக்கத்திலிருந்து கடல்சார் பாதுகாப்பில் ஒரு வலிமையான சக்தியாக மாறிய அதன் குறிப்பிடத்தக்க பயணத்தை நினைவுகூர்கிறது. கடலோரக் காவல் படையில் 152 கப்பல்கள் மற்றும் 78 விமானங்கள் உள்ளன. 2030-க்குள் 200 படைத்தளங்கள் மற்றும் 100 விமானங்கள் என்ற இலக்கை அடையும் நிலையில் உள்ளது.
நாங்கள் பாதுகாக்கிறோம் என்ற குறிக்கோளின் கீழ், இந்திய கடலோரக் காவல் படை தொடங்கப்பட்டதிலிருந்து 2023-ம் ஆண்டில் மட்டும் 200 பேர் உட்பட 11,554 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
பாதுகாப்புக்கான இந்த அர்ப்பணிப்பு இந்தியக் கடலோரக் காவல் படையை உலக அளவில் புகழ்பெற்றக் கடலோரக் காவல்படைகளில் ஒன்றாக நிலைநிறுத்தியுள்ளது.
இந்தியாவின் கடல்சார் மண்டலங்களில் இந்தியக் கடலோரக் காவல்படை தினமும் 50 முதல் 60 கப்பல்கள் மற்றும் 10 முதல் 12 விமானங்கள் மூலம் 24 மணி நேரமும் கண்காணிப்பை மேற்கொண்டு வருகிறது.
நீலப் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பான கடல்சார் போக்குவரத்தில் நிலையான முன்னேற்றத்திற்காக சுதந்திரமான, பாதுகாப்பான கடல் பகுதியை உறுதி செய்ய நாட்டின் இலக்கிற்குப் பங்களிப்பு செய்கிறது.
கடல்சார் பாதுகாப்பில் வளர்ந்து வரும் சவால்களுக்கு பதிலளிக்கும் விதமாக, இந்தியக் கடலோரக் காவல்படை, கடல்சார் சட்ட அமலாக்கத்தைக் கணிசமாக வலுப்படுத்தியுள்ளது.
இதன் விளைவாக ரூ.15,343 கோடி மதிப்புள்ள ஆயுதங்கள், தடைசெய்யப்பட்ட பொருட்கள் மற்றும் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 2023-ல் மட்டும் ரூ.478 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடத்தல்காரர்களுக்கு எதிராகக் கூட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ஊடுருவலைத் தடுத்துள்ளது.
இந்தியக் கடலோரக் காவல்படையின் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை அங்கீகரித்து, குடியரசுத்தலைவர், குடியரசு துணைத்தலைவர், பிரதமர், பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆகியோர் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.