ஜார்கண்ட் மாநில முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் அமலாக்த்துறையினரால் கைது செய்யப்பட்ட நிலையில், புதிய முதல்வராக சம்பாய் சோரன் பதவியேற்றார்.
ஜார்கண்ட் மாநிலத்தில், நில மோசடி, நிலக்கரி ஊழல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சட்டவிரோத பண பரிவர்த்தனை நடைபெற்றதாக அமலாக்கத்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த வழக்கில் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு தொடர்பிருப்பதாக அவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகமல் தலைமறைவானார். இதனைத்தொடர்ந்து கடந்த 31ஆம் தேதி ஆஜரான அவரை, அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.
இதனிடையே நேற்று ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து ஆட்சியமைக்க சம்பாய் சோரன் உரிமை கோரினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,ஆட்சி அமைப்பதற்கான பணியை உடனடியாக தொடங்க வேண்டும் என தெரிவித்தார். இதனையடுத்து ஆடசி அமைக்க வருமாறு சம்பாய் சோரனுக்கு ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று அழைப்பு விடுத்தார்.
இந்நிலையில் ஜார்கண்ட் மாநில முதலமைச்சராக சம்பாய் சோரன் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் சிபி.ராதாகிருஷ்ணன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதனிடையே அடுத்த 10 நாட்களுக்கு சட்டமன்றத்தில் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து ஜேஎம்எம் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஹைதராத்திற்கு அவசரமாக அனுப்பி வைக்கப்பட்டனர்.