உக்ரைனுக்கு புதிய நிதியை வழங்குவதற்காக ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் நேற்று ஒரு கூட்டத்தை நடத்திய நிலையில், நூற்றுக்கணக்கான விவசாயிகள் பிரஸ்ஸல்ஸில் உள்ள பாராளுமன்ற வளாகத்திற்கு வெளியே கூடியுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டோர் உச்சிமாநாடு நடைபெற்றுக் கொண்டிருந்த ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கு முன் அதிகாலையிலே தங்கள் டிராக்டர்களில் பிரஸ்ஸல்ஸ் நகருக்குச் சென்றனர்.
நேற்று காலை போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் தங்கள் கான்வாய்கள் மூலம் அந்த இடத்திற்கு வருவதற்கு முன்பே ஒரு சில டிராக்டர்கள் ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கு அருகே ஒரு வாரம் முழுவதும் நிறுத்தப்பட்டிருந்தன.
போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு சிலர் பாராளுமன்ற கட்டிடத்திற்கு முன்பு இருந்த பொருட்களை தீ வைத்து எரித்தனர், மற்றவர்கள் “நீங்கள் பூமியை நேசித்தால், அதை நிர்வகிப்பவர்களை ஆதரிக்கவும் “என்றும் “விவசாயிகள் இல்லை, உணவு இல்லை” என்ற வாசகங்கள் அடங்கிய பலகைகளை வைத்திருந்தனர்.
பெல்ஜியம் பிரஸ்ஸல்ஸில் ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டிற்கு செல்லும் சாலைகளை விவசாயிகள் 1,000 ஊழவூர்திகளைப் பயன்படுத்தி வழி மறித்துள்ளனர் என்று பெல்ஜிய காவல்துறை தெரிவித்துள்ளது.
கோபமடைந்த விவசாயிகள் வரிகள், விலைவாசி உயர்வு, மலிவான இறக்குமதிகள், விதிகள் மற்றும் அதிகாரத்துவம் பற்றி முறைப்பாடுகளை முன்வைத்து இப்போராட்டத்தை நடத்தினர். அத்துடன் ஐரோப்பிய உச்சி மாநாட்டில் விவசாயிகளின் குரல் எழுப்பப்படும் என்று அவர்கள் நம்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சிலர் நாடாளுமன்ற கட்டிடத்தின் மீது முட்டைகளை வீசினர். மற்றவர்கள் பட்டாசுகளை வெடித்தும், தீ வைத்தும் கொளுத்தினர். சதுக்கத்தில் ஒரு சிலை சேதப்படுத்தப்பட்டது.
இதற்கு கண்ணீர் புகை மற்றும் தண்ணீர் பீரங்கிகளை பயன்படுத்தி காவல்துறையினர் பதிலடி கொடுத்தனர்.