பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வரும் 26-ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டம் நடைபெற உள்ளதாக ஜாக்டோ – ஜியோ சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, பேசிய ஜாக்டோ – ஜியோ சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன், தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் என மொத்தம் 5 அரை லட்சம் பேர் உள்ளனர்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், தமிழக அரசில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றோம்.
ஜாக்டோ – ஜியோ சங்கத்தினர் கோரிக்கையை நிறைவேற்றுவதாக தி.மு.க தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருந்தது. அதனை நாங்களும் நம்பினோம்.
ஆனால், தி.மு.க ஆட்சி பொறுப்பேற்று 31 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், கோரிக்கையை நிறைவேற்றவில்லை.
தி.மு.க தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற மறுப்பதோடு, காலம் காலமாகப் பெற்று வந்த சரண் விடுப்பையும் காலவரையின்றி நிறுத்தி வைத்துள்ளது. இது தி.மு.க அரசு ஊழியர்களுக்குச் செய்யும் துரோகம் ஆகும்.
தமிழகத்தில், ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது அரசு ஊழியர்களின் போராட்டங்களுக்கு ஆதரவாக அறிக்கைகளை வெளியிட்டார். முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர் அரசு ஊழியர்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளைப் புறக்கணிக்கிறார்.
இந்த நிலையில், பிப்ரவரி 26 -ம் தேதி முதல் ஜாக்டோ – ஜியோ சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற உள்ளது. வரும் தேர்தலில் தி.மு.கவுக்கு எதிராக நாங்கள் எதிர்வினையாற்ற உள்ளோம். அப்போது நாங்கள் யார் என புரிந்து கொள்வார்கள் என்றார் ஆவேசமாக.