இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்கள் இழப்பிற்கு 336 ரன்களை எடுத்துள்ளது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளது.
இதில் முதல் டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
இந்த முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனைத் தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் தொடங்கியது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பாட்டிங்க செய்த இந்திய அணி முதல் நாள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 336 ரன்களை எடுத்துள்ளது.
இந்திய அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரராக களமிறங்கிய ஜெய்ஸ்வால் 17 பௌண்டரீஸ் மற்றும் 5 சிக்சர்கள் உட்பட இதுவரை 179 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்கிறார்.
மற்றொரு தொடக்க வீரரான இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 14 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து களமிறங்கிய சுப்மன் கில் 5 பௌண்டரீஸ் அடித்து 34 ரன்களில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் 27 ரன்களும், ரஜத் படித்தார் 32 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். பின்பு களமிறங்கிய அக்சார் படேல் 27 ரன்களும், பரத் 17 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
பின்பு களமிறங்கிய அஸ்வின் 5 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார். இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ரெஹான் அகமது மற்றும் சோயப் பஷீர் ஆகியோர் இரண்டு விக்கெட்களை வீழ்த்தியுள்ளனர்.
அதேபோல் ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் டாம் ஹார்ட்லி ஆகியோர் தலா 1 விக்கெட்களை எடுத்துள்ளனர். தற்போது இந்திய அணியில் ஜெய்ஸ்வால் மற்றும் அஸ்வின் களத்தில் உள்ளனர்.