மதுபான கொள்கை ஊழல் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் 5-வது முறையாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சம்மனை புறக்கணித்துள்ளார்.
கடந்த 2021- 2022 ஆண்டு டெல்லி அரசு கொண்டு வந்த மதுபான கொள்கை மூலம் சில குறிப்பிட்ட மதுபான நிறுவனங்கள் பலன் அடைந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக சிபிஐ விசாரணைக்கு டில்லி துணை நிலை ஆளுநர் சக்சேனா பரிந்துரை செய்தார்.
பின்னர் சட்ட விரோத பணப்பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. டில்லி துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி எம்.பி.சஞ்சய் சிங் உள்ளிட்டோர் கைது செய்யப்ட்டனர்.
இதுதொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் அஜராகவில்லை. பின்னர் 4 முறை அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டு நிலையிலும் அவர் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார்.
இந்நிலையில் இன்று (பிப்ரவரி 2)ஆஜராகுமாறு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை. முன்னதாக டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் அதிக எண்ணிக்கையில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.