பிரபல பாலிவுட் நடிகை பூனம் பாண்டே. இந்தி திரையுலகில் கடந்த 2013-ம் ஆண்டு வெளியான ‘நாஷா’ என்ற படம் மூலம் அறிமுகமானார்.
கங்கான ரனாவத் நடத்திய லாக் அப் என்ற நிகழ்ச்சி மூலம் மேலும் பிரபலம் அடைந்தார். 2020-ம் ஆண்டு தனது காதலர் சாம் பாம்பே என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். சமூக வலைத்தள பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களையும் காணொளிகளையும் வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்துவது பூனம் பாண்டேயின் வழக்கம்.
இந்த நிலையில், பிரபல நடிகை பூனம் பாண்டே இறந்துவிட்டதாக அவரின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேற்று பதிவிட்டு இருந்தார். இந்த தகவல் பூனம் பாண்டே ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.
குறிப்பாக, “கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் பூனம் பாண்டேவை இழந்துவிட்டோம். இந்த தகவலை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று அந்த பதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனால், நடிகை பூனம் பாண்டே மறைவுக்கு ரசிகர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தனர்.
இந்த நிலையில், நடிகை பூனம் பாண்டே இன்று ஒரு காணொளி வெளியிட்டுள்ளார். அதில், தான் இறக்கவில்லை என்றும், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு செய்யவே அப்படி செய்தேன் என தெரிவித்துள்ளார். பூனம் பாண்டேவின் இந்த செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.