திமுக ஆட்சிக்கு வந்து 31 மாதங்களில், அனைத்திற்கும் விலையையும், வரியையும் ஏற்றி விட்டார்கள் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டினார்.
ஊழலுக்கு எதிரான அண்ணாமலையின் ”என் மண் என் மக்கள்” பாதயாத்திரை வேலூர் சட்டமன்றத் தொகுதியில் நடைப்பெற்றது. இந்த பாதயாத்திரையில் ஆயிரக்கணக்காணோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய அண்ணாமலை,
சோழ மாமன்னர்களின் ஆளுகையில், மாபெரும் போர்க்கள பூமியாக விளங்கிய மாவீரர்களின் நிலம். பின்னாளில் தமிழக வரலாற்றை நிர்ணயித்த மாநகரம் வேலூர். பிரம்மா விஷ்ணு சிவன் என்ற மும்மூர்த்திகளும் லட்சுமி சரஸ்வதி பார்வதி என முப்பெரும் தேவியரும் ஒரு சேர அருள் வழங்கும் ஜலகண்டேஸ்வரர் கோயில் இருக்கும் தொகுதி.
நம் நாட்டின் முதல் சுதந்திர புரட்சியான 1806 வேலூர் சிப்பாய் கலகம் இங்குதான் நடைபெற்றது. ஆங்கிலேய அரசு சிப்பாய்களுக்கு காதில் கடுக்கன் அணியக்கூடாது, நெற்றியில் விபூதி இடக்கூடாது ,சமய சின்னங்கள் அணியக் கூடாது என்று கடும் கட்டுப்பாடுகள் விதித்ததை தொடர்ந்து ஆங்கிலேயர்களை எதிர்த்து, ஜாதி மத வித்தியாசங்களை மறந்து அனைத்து சிப்பாய்களும் இந்தியர் என்ற உணர்வில் போராடினர். 900 இந்திய சிப்பாய்கள் உயிர்த் தியாகம் செய்த பிறகுதான், புரட்சியைக் கட்டுக்குள் கொண்டு வர முடிந்தது.
பாரதப் பிரதமரின் ஒன்பதாண்டு கால நல்லாட்சி, இலக்கு நிர்ணயித்துச் செயல்படுகிறது. சுதந்திரம் கிடைத்து 70 ஆண்டுகள் கடந்தும் மின்சார வசதி இல்லாத கிராமங்கள் நம் நாட்டில் இருந்தன. நமது பாரதப் பிரதமர் மோடி, கடந்த 2014 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தவுடன், 1000 நாட்களில் அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் வழங்குவோம் என்று அறிவித்து, சுமார் 800 நாட்களிலேயே இந்தியாவின் அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் வழங்கினார்.
ஊழலற்ற ஆட்சியினால், உலக அரங்கில் நமது நாட்டின் வளர்ச்சி பல மடங்காகியிருக்கிறது. தமிழ் வளர்ச்சிக்காகவும் தமிழர்கள் நலனுக்காகவும் நமது பிரதமர் செயல்படுத்தியுள்ள திட்டங்கள் ஏராளம்.
குறிப்பாக, வேலூர் மாவட்டத்தை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கு 2,637 கோடி ரூபாய் நமது மத்திய அரசு செலவிட்டுள்ளது. வேலூர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு நமது மத்திய அரசு 980 கோடி ரூபாய் வழங்கியுள்ளது.
வேலூர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வேலூர் கோட்டையை புதுப்பித்தல், புதிய பேருந்து நிலையம், பூங்கா என பல திட்டங்கள் மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலமாக செயல்படுத்தப்பட்டுள்ளது.
UDAN திட்டத்தின் கீழ், 65 கோடி ரூபாய் செலவில் வேலூர் விமான நிலைய விரிவாக்க பணிகள் நிறைவுபெற்றுவிட்டன. விரைவில் இந்த விமான நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்.
பிரதமரின் வீடு திட்டம் மூலமாக 26,764 பேருக்கு வீடு, 2,12,528 வீடுகளில் குழாயில் குடிநீர், 1,12,423 வீடுகளில் இலவச கழிப்பறைகள், 1,09,604 பேருக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு, 14,256 பேருக்கு 5 லட்ச ரூபாய் பிரதமரின் மருத்துவ காப்பீடு, 59,603 விவசாயிகளுக்கு PM Kisan கௌரவ நிதியின் மூலமாக வருடம் 6000 ரூபாய், முத்ரா கடனுதவி 6,478 கோடி ரூபாய் என வேலூர் மாவட்டத்துக்கு வழங்கப்பட்ட மத்திய அரசின் திட்டங்களால், லட்சக்கணக்கானோர் பலனடைந்துள்ளனர்.
திருப்பூர் பகுதியில் மட்டும் 60,000 உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள், திரும்பிச் சென்றுவிட்டதாக செய்திகள் வந்துள்ளன. அவர்கள் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியின் காரணமாக வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக தெரிவித்து மக்கள் திரும்பிச் செல்கிறார்கள்.
இத்தனை ஆண்டுகளாக, திமுக தலைவர்கள், வடநாட்டு மக்களை அவமானப்படுத்திக் கொண்டிருந்தார்கள். தற்போது, வேலைக்கு ஆள் கிடைக்காமல், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொழிலாளர்கள் பற்றாக்குறையால் உற்பத்தி பாதிக்கப்படும்.
இது தொடர்பாக உற்பத்தி நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, தொழிலாளர்கள் வெளியேற்றத்தை குறைக்க என்ன வழி என்பதை திமுக அரசு ஆலோசிக்க வேண்டும்.
தமிழக அமைச்சர்களின் 11 அமைச்சர்கள் மீது ஊழல் வழக்கு நடக்கிறது.
இவர்களால் எப்படி தமிழகத்தை முன்னேற்ற முடியும்? ஆட்சிக்கு வந்து 31 மாதங்களில், அனைத்திற்கும் விலையையும், வரியையும் ஏற்றி விட்டார்கள். மத்திய அரசு வழங்கும் நிதியில் திமுக ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டிருக்கிறதே தவிர, திமுக அரசு பெறும் வரிப்பணம் எங்கு செல்கிறது என்பது தெரியவில்லை.
புதிய கல்விக் கொள்கை திட்டத்தில் காலை உணவுத் திட்டம் கொண்டு வந்து நிதி கொடுத்தது மத்திய அரசு. அதை முதலமைச்சர் காலை உணவுத் திட்டம் என்று பெயர் மட்டும் மாற்றியிருக்கிறார்கள். ரேஷன் கடையில் வழங்கப்படும் அரிசியின் விலையில் 32 ரூபாய் மத்திய அரசும், 2 ரூபாய் மாநில அரசும் கொடுக்கிறது. ஆனால் அதையும் திமுக கணக்கில் எழுதிக் கொள்வார்கள்.
அறுபது ஆண்டு காலமாக தமிழகத்தில் நிலவும் ஜாதி, ஊழல், குடும்ப, அடாவடி அரசியல் இவை நான்கையும் ஒழிக்க ஒரே மருந்து நரேந்திர மோடி. அவரது ஊழலற்ற நல்லாட்சியை எதிர்த்து, சுயநலவாதிகள் இந்தி கூட்டணி தொடங்கினார்கள்.
இன்று, இந்தி கூட்டணி சிதறிக் கொண்டிருக்கிறது. நமது தேசிய ஜனநாயகக் கூட்டணி, காங்கிரஸ் கட்சி 60 ஆண்டுகளாக உருவாக்கியிருந்த நக்சல் பிரச்சினை, காஷ்மீர் பிரச்சினை, ராமர் கோவில், ஆர்டிகிள் 370 என அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்டு வருகிறது.
உலகப் பொருளாதாரத்தில் தற்போது ஐந்தாவது இடத்தைப் பிடித்திருக்கிறோம். வரும் 2028 ஆம் ஆண்டு, உலகில் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாகவும், 2047 ஆம் ஆண்டு, முதல் பொருளாதார நாடாகவும் நமது நாடு முன்னேறும்.
அயோத்தி ராமர் கோவில் கட்ட, அனைத்துத் தரப்பு மக்களையும் ஒன்றிணைத்து, அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி, சட்டப்படியான தீர்ப்பின் மூலம் கட்டியிருக்கிறோம். பாராளுமன்றத்தில், பெரும்பான்மை அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யவில்லை.
ராமர் கோவில் பிரானப் பிரதிஷ்டை முதல் அழைப்பிதழ் இஸ்லாமிய சகோதரருக்குத் தான் வழங்கப்பட்டது. நமது பிரதமர் அவர்கள், 11 நாட்கள் கடும் விரதம் இருந்து, தமிழகத்தில் ராமருடைய பாதம் பட்ட இடங்களில் எல்லாம் வழிபட்டு, அயோத்தியில் பிராணப் பிரதிஷ்டை செய்தார்.
தமிழகத்தில், இத்தனை ஆண்டு காலமாக, மத அரசியலும், ஜாதி அரசியலும் செய்து மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். வளர்ச்சி தேங்கி நிற்கிறது. இன்றைய தினம், உலகின் நம்பர் ஒன் ப்ராண்ட் வால்யூ இருக்கும் ஒரே தலைவர் நமது பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள்.
அவர் லட்சத் தீவில் போய் நின்றாலே, லட்சத் தீவின் சுற்றுலாத் துறை 3,000 மடங்கு அதிகரிக்கும். அதே போல, இம்முறை வேலூர் பாராளுமன்றத் தொகுதியை பாஜக வெல்லும்போது, நமது பிரதமர் மோடி அவர்களை வேலூருக்கு அழைத்து வந்து, வேலூர் கோட்டையை உலக அரங்கிற்குக் கொண்டு செல்கிறோம் என்று உறுதி அளிக்கிறோம்.
மத்தியில், ஊழலற்ற நல்லாட்சி தொடர்ந்திட, குடும்ப அரசியல் நடத்தும் கட்சிகளைப் புறக்கணிக்க வேண்டும். தமிழகத்தின் வளர்ச்சிக்கு, வேலூரின் வளர்ச்சிக்கு, நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்க இம்முறை தமிழகம் முழுக்க பாஜக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.