திமுக ஆட்சிக்கு வந்து ஒரே ஆண்டில், மணல் கொள்ளை மூலமாக அரசுக்கு ஏற்பட்ட இழப்பு 4,730 கோடி ரூபாய் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டினார்.
ஊழலுக்கு எதிரான அண்ணாமலையின் ”என் மண் என் மக்கள்” பாதயாத்திரை KV குப்பம் சட்டமன்றத் தொகுதியில் நடைப்பெற்றது. இந்த பாதயாத்திரையில் ஆயிரக்கணக்காணோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய அண்ணாமலை,
விவசாயத்தையும் மாம்பழ சாகுபடியையும் நம்பியிருக்கும் தொகுதி கேவி குப்பம். தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் இணைக்கப்பட வேண்டும், மோர்தானா அணையிலிருந்து ராஜா தோப்பு அனை வரை உள்ள கால்வாயை சீரமைத்து, பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறச் செய்ய வேண்டும் என எந்தக் கோரிக்கையையும் திமுக நிறைவேற்றவில்லை.
தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், விவசாய குறைதீர்ப்பு கூட்டத்திற்கும் போகமாட்டார், குறையையும் கேட்கமாட்டார், விவசாயிகள் கோரிக்கையையும் நிறைவேற்றமாட்டார்.
இந்தத் தொகுதிக்கு உட்பட்ட காங்குப்பம் கிராமம் தான் அமைச்சர் துரைமுருகனின் சொந்த ஊர். அவர் குடும்பம் மட்டும் நன்றாக முன்னேறி உள்ளது. ஆனால் தொகுதி முன்னேறவில்லை. சொந்த கிராமத்துக்கே ஒன்றும் செய்யாததால், கடந்த பாராளுமன்றத் தேர்தலில், சொந்த பூத்திலேயே குறைந்த வாக்கு வாங்கியிருந்தார்கள்.
2014க்கு முன்பு வெறும் மூன்று பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை இருந்தது தற்போது நெல், கரும்பு, கொப்பரைத் தேங்காய் என 23 பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயித்துள்ளது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசு.
சொட்டு நீர் பாசனத்துக்கு மானியம், விவசாயிகள் மாடுகள் வாங்க கோகுல் திட்டம் என பல்வேறு விவசாய நலத்திட்டங்களைச் செயல்படுத்தி, பொதுமக்களை மீண்டும் விவசாயத்தை நோக்கித் திரும்ப வைத்திருக்கிறது நமது அரசு. மேலும், வேலூர் மாவட்டத்தில் மட்டும், 59,603 விவசாயிகள், PM Kisan கௌரவ நிதியாக வருடம் 6000 ரூபாய் பெறுகிறார்கள். இதுவரை, 15 தவணைகளில், 30,000 ரூபாய் விவசாயிகள் வங்கிக் கணக்குக்கு வந்துள்ளது.
அதுமட்டுமின்றி, வேலூர் மாவட்டத்தில், 26,764 பேருக்கு பிரதமரின் வீடு திட்டம் மூலமாக வீடு, 2,12,528 வீடுகளில் குழாயில் குடிநீர், 1,12,423 வீடுகளில் இலவச கழிப்பறைகள், 1,09,604 பேருக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு, 14,256 பேருக்கு 5 லட்ச ரூபாய் பிரதமரின் மருத்துவ காப்பீடு திட்டம் 6,478 கோடி ரூபாய் முத்ரா கடனுதவி என பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
திமுக ஆட்சிக்கு வந்து ஒரே ஆண்டில், மணல் கொள்ளை மூலமாக அரசுக்கு ஏற்பட்ட இழப்பு 4,730 கோடி ரூபாய். இந்த மாவட்ட அமைச்சரான, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தான் இதற்கு முழுமுதற் காரணம்.
இந்த மணல் கொள்ளை முன்னின்று செய்தவர்களுடைய 136 கோடி ரூபாய் சொத்தை, அமலாக்கத்துறை நேற்று முடக்கியுள்ளது. அமலாக்கத்துறை, கதிர் ஆனந்த் மற்றும் அமைச்சர் துரைமுருகன் வீட்டுக் கதவைத் தட்டும் நாள் விரைவில் வரலாம். திமுகவினர் செய்துள்ள ஊழலுக்கு, புழல் சிறையில் தனி கட்டிடம் கட்டி, திமுக அமைச்சர்கள் தங்கியிருக்கும் இடம் என்று பெரிய பெயர்ப்பலகை வைக்க வேண்டும்.
மாணவர்கள் உலகத் தரம் வாய்ந்த கல்வியைப் பெறுவதற்காக, மத்திய அரசு கொண்டு வந்த கல்வித் திட்டத்தையும், இலவசக் கல்வி வழங்கும் நவோதயா பள்ளி மற்றும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளையும், தங்கள் கட்சியினர் நடத்தும் தனியார் பள்ளிகள் வருமானத்துக்காக திமுகவினர் தடுக்கிறார்கள்.
தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரும்போது, நவோதயா பள்ளிகள், காமராஜர் பள்ளி என்ற பெயரில் தமிழகம் முழுவதும் கொண்டு வரப்படும். மாணவர்களுக்கு அரசுப் பள்ளிகளிலேயே தாய்மொழி கட்டாயப் பாடத்தோடு, மொத்தம் ஐந்து மொழிகள் கற்றுக் கொள்ள வழிவகை செய்யப்படும்.
வரும் பாராளுமன்றத் தேர்தலில், பத்து ஆண்டுகள் நல்லாட்சி வழங்கி, ஏழை எளிய மக்கள், இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் என அனைத்துத் தரப்பு மக்களும் பலனடையும்படி எண்ணற்ற நலத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ள நமது பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள், மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்க, தமிழகமும் துணை நிற்க வேண்டும். தமிழகம் முழுவதும் பாஜக கூட்டணி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்து, பாராளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் எனத் தெரிவித்தார்.