இங்கிலாந்துக்கு அணிக்கு எதிராக இரட்டை சதம் அடித்த ஜெய்ஸ்வால் சச்சின் சாதனையை முறியடித்துள்ளதாக முன்னாள் இந்திய வீரர் பார்த்தீவ் படேல் கூறியுள்ளார்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.
இதில் முதல் டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
இதில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனைத் தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் வீரர் ஜெய்ஸ்வால் 209 ரன்களை எடுத்திருந்தார்.
இந்நிலையில் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கூட டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் இரட்டை சதமடிக்க 10 வருடங்கள் எடுத்துக்கொண்டதாக முன்னாள் இந்திய வீரர் பார்த்தீவ் படேல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “ஜெய்ஸ்வால் வான்கடே மைதானத்தில் ஜாம்பவான் வீரர்களுக்கு ரசிகர்கள் கொடுத்த கைதட்டல்களை பார்த்தவர். அதை அவரும் கேட்க விரும்பினார்.
நாளடைவில் அதே மைதானத்தில் ஐ.பி.எல். தொடரில் சதமடித்த அவர் அந்த கைதட்டல்களை பெற்றதை நாம் பார்த்தோம்.ஆனால் டெஸ்ட் கிரிக்கெட் என்பது வித்தியாசமான விளையாட்டு.
ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் சதமடித்துள்ள அவர் தற்போது இரட்டை சதமும் அடித்துள்ளார். பொதுவாக அனைவராலும் இரட்டை சதத்தை அடிக்கடி அடிக்க முடியாது.
சச்சின் பாஜி கூட டெஸ்ட் கிரிக்கெட்டில் சதமடிக்க 10 வருட காலம் எடுத்துக்கொண்டார். ஆனால் ஜெய்ஸ்வால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகம் ஆன 1 வருடத்திலேயே இரட்டை சதம் அடித்துள்ளார்” என்று கூறினார்.