தமிழில் முதல் முறையாக காலப்பயணம் பயன்படுத்தும் வகையில் வந்த படம் தான் இன்று, நேற்று, நாளை. இந்த படம் 2015 ஆம் ஆண்டு வெளியானது.
இப்படத்தை ரவிக்குமார் இயக்க, திருக்குமரன் தயாரிப்பு நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் மியா ஜார்ஜ் நடித்திருந்தனர்.
மேலும் ‛இன்று நேற்று நாளை’ படத்தின் இரண்டாம் பாகம் கடந்த 2021ல் துவங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு பூஜையும் நடைபெற்றது.
அதே சமயம் இந்த படத்தை ரவிக்குமாருக்கு பதிலாக அவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய எஸ்பி கார்த்தி என்பவர் இயக்குவதாக இருந்தது.
ஆனால் அதன்பிறகு கடந்த மூன்று வருடங்களாக அந்த படம் குறித்து எந்தவிதமான முன்னேற்ற தகவல்களும் இல்லை. இந்த நிலையில் அந்த படத்தின் கதாநாயகனான விஷ்ணு விஷால் நடிப்பில் தற்போது லால் சலாம் என்கிற திரைப்படம் வெளியாக இருக்கிறது.
இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவரிடம் இன்று நேற்று நாளை படத்தின் இரண்டாம் பாகம் என்ன நிலையில் இருக்கிறது என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், ‛‛ஒவ்வொரு முறையும் அந்த படம் அடுத்த கட்டத்திற்கு நகர முயற்சிக்கும் போதெல்லாம் எதிர்பாராத விதமாக தடைபட்டு நிற்கிறது. ஒருவேளை அந்த படம் முழுவதும் கைவிடப்பட்டுள்ளதா அல்லது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதா என்கிற விவரம் எனக்கு தெரியவில்லை” என்று கூறியுள்ளார்.