உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் தொகைத் (பிஎல்ஐ) திட்டத்தின் செயல்திறனை மேம்படுத்த கூட்டு செயல்பாடுகள் தேவை – பிஎல்ஐ திட்டத்தின் கீழ் ரூ.1.07 லட்சம் கோடி முதலீடு கிடைத்துள்ளது என மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை (DPIIT) ஏற்பாடு செய்திருந்த, உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் தொகைத் திட்டம் தொடர்பான கூட்டத்தில்’ மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பங்கேற்று உரையாற்றினார்.
கூட்டத்தில் பேசிய பியூஷ் கோயல்,
இந்தியாவை உற்பத்திக்கான உலகளாவிய மையமாக மாற்றுவது பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையாக உள்ளது என்றார். அதை முன்னெடுத்துச் செல்லும் வகையில் பிஎல்ஐ திட்டம் உள்ளது என்று அவர் கூறினார்.
உயர்தர பொருட்களின் உற்பத்திக்கு முன்னுரிமை அளிப்பதில் தொழில்துறையினர் கவனம் செலுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார், இது வணிகங்கள் மற்றும் நுகர்வோர் இருவருக்கும் நன்மைகளை உறுதி செய்யும் என்று அவர் தெரிவித்தார்.
பிஎல்ஐ எனப்படும் உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் தொகைத் திட்டங்களின் ஒட்டுமொத்த சாதனைகள் குறித்தும் அவர் பேசினார். இத்திட்டத்தின் கீழ் ரூ.1.07 லட்சம் கோடி (2023 டிசம்பர் வரை) முதலீடு பெறப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
இதன் விளைவாக ரூ. 8.70 லட்சம் கோடி மதிப்பிலான உற்பத்தி மற்றும் விற்பனை நடைபெற்றுள்ளது என்றும் சுமார் 7 லட்சம் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். 8 துறைகளுக்கு பிஎல்ஐ திட்டத்தின் கீழ் சுமார் ரூ. 4,415 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.