பெரும்பாலான இந்துக்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பில் சேர்ந்திருக்க மாட்டார்கள், சங்கத்தின் சித்தாந்தத்தை விரும்பும், ஆனால் இன்னும் சேராத பலரை கொண்டு வருவதே அடுத்த சவால் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
பெங்களூரில் உள்ள சன்ஸ்கார் பாரதியின் கர்நாடக பிரிவின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட அகில பாரதிய கலாசதக் சங்கத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது, 1925ல் ஆர்எஸ்எஸ் உருவானபோது, உண்மையான நிகழ்ச்சி நிரல் என்னவென்று யாருக்கும் தெரியாது. ஆர்எஸ்எஸ் இந்துக்களை ஒரே கூரையின் கீழ் இணைக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது என்று அனைவருக்கும் கூறப்பட்டது. நாங்கள் போதுமான பலம் பெற்ற பிறகுதான் ராமஜென்மபூமி போன்ற பிரச்சினைகள் வெளிப்பட்டன என அவர் தெரிவித்தார்.
ஆர்எஸ்எஸ் இந்த விவகாரங்களை ஆரம்பத்தில் வெளிப்படுத்தியிருந்தால், வலதுசாரி அமைப்பு இதுவரை செய்ததை சாதித்திருக்க முடியாது என்றார் பகவத். ஜெய் ஸ்ரீ ராம், வந்தே மாதரம் மற்றும் பாரத் மாதா கி ஜெய் என்று உரத்த கோஷங்களை எழுப்பிய அவர், பெரும்பாலான இந்துக்கள் ஆர்எஸ்எஸ்ஸில் சேர்ந்திருக்க மாட்டார்கள். ங்கத்தின் சித்தாந்தத்தை விரும்பும், ஆனால் இன்னும் சேராத பலரை கொண்டு வருவதே அடுத்த சவால் என்றும் அவர் கூறினார்.
தற்போது கலை விமர்சனம் என்பது சமூகங்களைப் பிளவுபடுத்துவதிலும் பாதுகாப்பற்ற சமூகங்களை உருவாக்குவதிலும் நம்பிக்கை கொண்ட ஒரு சிலரின் வலுவான செல்வாக்கின் கீழ் உள்ளது, இது உலகளவில் நாடுகள் பிளவுபடுவதற்கு உதவுகிறது. இது உலகளாவிய நிகழ்வு. இதனை உடைத்து, கலையின் உண்மை மற்றும் ‘தெய்வீகத்தை ஒன்றிணைப்பதன் மூலம் சமூகங்கள் ஒன்றிணைவதை உறுதி செய்ய முடியும் என்றும் அவர் விளக்கினார்.
நாட்டில் பசுவதைக்கு முழுமையான தடையை ஆர்எஸ்எஸ்ஸால் நிறைவேற்ற முடியவில்லை என்றும் மோகன் பகவத் வேதனை தெரிவித்தார். சன்ஸ்கர் பாரதி என்பது ஆர்எஸ்எஸ்ஸின் கலாச்சாரப் பிரிவாகும், மேலும் இந்திய கலை, நுண்கலைகள் போன்றவற்றை மேம்படுத்துவதற்காக செயல்படுகிறது.