தமிழகத்தின் நிலைமை ஊழல் ஆட்சி, சாதி ஆட்சி குடும்ப ஆட்சி, அடாவடிதனம் திராவிட அரசியல் இது போன்று தமிழக மக்கள் மீது திமுக சுமையாக பாரமாக ஏற்றி வைத்து இருக்கின்றனர் தமிழக மக்கள் விரத்தியின் விழும்பில் இருக்கின்றார்கள் எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை, அமைந்தகரையில் உள்ள தனியார் மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான பாஜக தலைமைத் தேர்தல் அலுவலகத்தை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை திறந்து வைத்தார்.
தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி, தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன்,பாஜக சட்டமன்றக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து பா.ஜ.க. தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் மாநில தேர்தல் இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி மேடையில் பேசுகையில்,
இம்முறை பா.ஜ.க. நிச்சயமாக 400-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெறும்.
தமிழகத்தில் ஊழல் மிகுந்த தி.மு.க. நிச்சயமாக அகற்றப்படும். காங்கிரஸ் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பலரும் சிறையில் உள்ளனர். பா.ஜ.க. 400-க்கும் அதிகமாக தொகுதியில் வெற்றி பெறும் என சொன்ன காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு நன்றி. அண்ணாமலை வந்த பிறகு தமிழகம் முழுவதும் வாங்க மோடி, வணக்கம் மோடி என்ற கோஷம் அதிகரித்துள்ளது.
தமிழகம் முழுவதும் தாமரை மலரும் சனாதன தர்மத்தை இழிப்படுத்தும் தி.மு.க.வுக்கு இம்முறை நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் பதிலடி கொடுப்பார்கள் எனத் தெரிவித்தார்.
மேடையில் பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,
பாராளுமன்ற தேர்தலுக்கு ஆவலோடு காத்திருக்கிறோம். மாற்றம் வரவேண்டும் என மக்கள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் காத்து கொண்டிருப்பது தெரிகிறது. ஏப்ரல் மாதத்தில் தேர்தல் வரலாம் எனவே நமக்கு காலம் குறைவாக உள்ளது. மிக கடுமையான உழைப்பை இந்த பாராளுமன்ற தேர்தலுக்கு போட்டு தயாராக இருக்கிறோம்.
மக்கள் பிரச்சினைகளுக்காக மாநில அரசை எதிர்த்து நாம் நடத்திய பல போராட்டத்திற்காக நம் தொண்டர்கள் பலர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளை நாம் நடத்திக் கொண்டே இருக்கிறோம். சேவை செய்வது தான் நமது கட்சியின் அடித்தளம் என்பதால் தொடர்ந்து சேவை செய்து கொண்டே இருக்கிறோம்.
2024 பாராளுமன்றத் தேர்தலை பொருத்தவரை நாமும் தயாராக இருக்கிறோம், மக்களும் தயாராக இருக்கிறார்கள். தமிழக அரசியல் வரலாற்றில் இன்று பாஜக 183 தொகுதிகளுக்கு சென்று மக்களை நேரடியாக பார்த்து உள்ளது. எந்த கட்சியும் இதுபோன்று செய்தது இல்லை. என் மண் என் மக்கள் யாத்திரையில் பலதரப்பு மக்களை சந்தித்துள்ளோம். 200வது தொகுதி சென்னையில் 11 ஆம் தேதி நடைபெறும்.
யாத்திரையில் காலையிலிருந்து இரவு வரை பலதரப்பபட்ட மக்களை சந்தித்து கொண்டு இருக்கிறோம். 2024 -இல் தமிழ்நாட்டில் ஒரு அரசியல் புரட்சி ஏற்படப்போகிறது.
ஒட்டகத்தின் முதுகில் சுமை ஏற ஏற ஓரளவு தாங்கும், ஒரு கட்டத்திற்கு பிறகு தாங்காது. தமிழகத்தின் நிலைமை ஊழல் ஆட்சி, சாதி ஆட்சி குடும்ப ஆட்சி, அடாவடிதனம் திராவிட அரசியல் இது போன்று தமிழக மக்கள் மீது சுமையாக பாரமாக ஏற்றி வைத்து இருக்கின்றனர்.
தமிழக மக்கள் விரத்தியின் விழும்பில் இருக்கின்றார்கள். எங்கே பார்த்தாலும் லஞ்சம் ஊழல் இருக்கும் பொழுது தங்களுடைய குறைகளை மக்கள் யாரிடம் கொண்டு செல்வார்கள்.
பத்து ஆண்டுக்கு பிறகு மூன்றாவது முறையாக ஆட்சிக்கட்டலில் அமரக்கூடிய தகுதி உடையவர் பிரதமர் மோடி என மக்களுக்கு நன்றாக தெரியும் எனத் தெரிவித்தார்.