எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள், மத்திய அரசின் தீவிர முயற்சியால் விடுதலை செய்யப்பட்ட நிலையில், சென்னை வந்தடைந்தனர். அவர்களை தமிழக பாஜக நிர்வாகிகள் சால்வை அணிவித்து வரவேற்றனர்.
கடந்த டிசம்பர் 13-ஆம் தேதி நெடுந்தீவு அருகே புதுக்கோட்டையைச் சேர்ந்த 12 மீனவர்கள், மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி மீனவர்களை கைது செய்தனர். தொடர்ந்து, மீனவர்களை இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதனை அடுத்து தமிழக மீனவர்களை மீட்க பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டது. இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, புதுக்கோட்டையைச் சேர்ந்த 12 மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர். இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் மீனவர்களை பாதுகாப்பாக விமானத்தில் அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில், சென்னை வந்த தமிழக மீனவர்களை, தமிழக பாஜக நிர்வாகிகள் சால்வை அணிவித்து வரவேற்றனர். தமிழக மீனவர்களை மீட்க தீவிர முயற்சி மேற்கொண்ட, பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு மீனவர்கள் நன்றி தெரிவித்தனர்.