வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலானது கோவை மாநகரிலிருந்து மேற்கே சுமார் 36 கி.மீட்ட தூரத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது.
வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் மனோன்மணியம்மை உடனுறை வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலும், வெள்ளியங்கிரி மலை மீது ஏழாவது மலையில் சுயம்பு வெள்ளியங்கிரி ஆண்டவரும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள். வருடத்தின் அனைத்து தினங்களிலும் மலையடி வாரத்தில் உள்ள கோவிலில் மூன்று கால பூஜைகள் நடைபெற்று வருகிறது.
மேலும், வெள்ளியங்கிரி சிவபெருமானின் திருவுருவாகவே போற்றப்படுகிறது. சித்தர்களும் முனிவர்களும் தற்போதும் தவம் செய்து வருவதாகப் பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.
இப்படி சிறப்பு வாய்ந்த வெள்ளியங்கிரி மலைக்குச் செல்ல வனத்துறை பக்தர்களுக்குத் தடை விதித்துள்ளது. இதற்கு பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவுக்கு பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், கோவை நகரின் மேற்கு எல்லையில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள ஸ்தலம் வெள்ளியங்கிரி மலை. இந்த மலையைத் தென் கைலாயம் என்றும் போற்றப்படுகிறது.
இந்த மலையில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை பக்தர்கள் ஏழு மலைகளைத் தாண்டி சிவபெருமானைத் தரிசித்து வருவது வழக்கம்.
தற்சமயம் பிப்ரவரி மாதம் என்பதால் பல்வேறு பகுதியிலிருந்து வெள்ளியங்கிரி மலைக்குப் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
ஆனால், பக்தர்கள் மலை ஏற மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்து வருகிறது. இதனால், பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
எனவே பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று, பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை பக்தர்களை வெள்ளியங்கிரி மலை எற அனுமதிக்க வேண்டும்.
பக்தர்களுக்குத் தேவையான உதவிகளையும் பாதுகாப்புகளையும் வனத்துறை அளிக்க வேண்டும் என அந்த கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.